×

திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிபாட்டில் இல்லாத பழமையான கோயில்களை தொன்மை மாறாமல் மீட்டெடுத்து புனரமைப்பு-மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முயற்சி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வழிபாட்டில் இல்லாத பழங்கால கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்கும் முயற்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஈடுபட்டுள்ளது.தொண்டை நாடு சான்றோருடைத்து என போற்றப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில், எண்ணற்ற வரலாற்று நினைவு சின்னங்களும், ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க திருக்கோயில்களும் உள்ளன. அவற்றை முறையாக பாதுகாத்து பராமரிக்க தவறியதால், பல இடங்களில் திருக்கோயில்களும், வரலாற்று சின்னங்களும் சிதைந்துள்ளன.

மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், 14ம் நூற்றாண்டைச் ேசர்ந்த பிரம்மதேசம் சந்திரமவுலீஸ்வரர் கோயில், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயில் என பெருமை மிக்க ஏராளமான ஆன்மிக தலங்கள் வழிபாட்டில் உள்ளன.

அதே நேரத்தில், மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் பழமையும், பெருமையும் மிக்க எண்ணற்ற திருக்கோயில்கள் பராமரிப்பும், வழிபாடும் இல்லாமல் சிதிலமடைந்து உள்ளன.இந்நிலையில், வழிபாட்டில் இல்லாத, சிதிலமடைந்த பழமையான கோயில்களை கண்டறிந்து, அதன் வரலாற்றையும், கோயிலையும், தொன்மை மாறாமல் மீட்டெடுத்து, புனரமைக்கும் முயற்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தற்போது ஈடுபட்டுள்ளது.

அதையொட்டி, முதற்கட்டமாக கலசபாக்கம் தாலுகா, சீனந்தல் கிராமத்தில் உள்ள வெள்ளனத்தாங்கீஸ்வரர் கோயில், செய்யாறு தாலுகா, திருப்பனமூர் சிவாலயம், செங்கட்டான் குன்றில் சிவாலயம், சித்தாத்தூர் சிவாலயம் ஆகியவற்றின் வரலாற்று தொன்மையை ஆய்வு செய்ய வரலாற்று ஆய்வு நடுவம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், வழிபாட்டில் இல்லாத பழங்கால, பாழடைந்த கோயில்களை மீட்டெடுக்கும் முயற்சியில் வரலாற்று ஆய்வு நடுவம் ஈடுபட்டிருக்கிறது.
மேலும், வழிபாட்டில் இல்லாத பழங்கால கோயில்களை தொல்லியல் ஆய்வாளர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை சேகரிக்க உள்ளனர். மேலும், அங்குள்ள கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவற்றையும் ஆவணப்படுத்த இருக்கிறோம்.

அதைத்தொடர்ந்து, இது ெதாடர்பான விரிவான ஆவண அறிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் அனுப்பி வைக்கப்படும்.அதன்மூலம், பழங்கால கோயில்கள் புனரமைக்கவும், மீண்டும் வழிபாட்டுக்கு கொண்டுவரவும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோர், தங்கள் பகுதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான, வழிபாட்டில் இல்லாத கோயில்கள் குறித்த விபரங்கள் மற்றும் படங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Reconstruction-District Historical Research Center ,district ,Thiruvannamalai , Thiruvannamalai: In the Thiruvannamalai district, there are ancient temples that are not worshiped
× RELATED சிவாலயங்களில் சங்கு பூஜை