தஞ்சை பெரிய கோயிலில் ஒரு நாள் மட்டும் ராஜராஜசோழன் 1035வது சதய விழா-விழாக்குழு தலைவர் தகவல்

தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035வது ஆண்டு சதய விழா வரும் 26ம் தேதி காலை மங்கள இசையுடன் துவங்குகிறது.தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் நேற்று அளித்த பேட்டி: மாமன்னன் ராஜராஜசோழன் 1035வது ஆண்டு சதய விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. வழக்கமாக மிக சிறப்பாக 2 முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழா, இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருநாள் மட்டும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 26ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு பேரபிஷேகம் , மதியம் 1 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு, இரவு 8 மணிக்கு மேல் கோயில் வளாகத்தின் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதியுலா 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்கு வீதிகளில் நடைபெறாது. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் குறைந்தளவு பக்தர்களே அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும். கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வெளியில் இருந்தே வழிபடலாம். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கும்போது காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: