வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் சமாதிகளில் மண் சேகரிக்கும் இசை ஆசிரியர்-காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க திட்டம்

ஊட்டி : இந்திய நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் சமாதிகளில் இருந்து மண் சேகரிக்கும் பணியில் மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் இசை ஆசிரியர் ஈடுபட்டு வருகிறார்.மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் கோபிநாத் ஜாதவ் (43). தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இசை ஆசிரியரான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் ேததி முதல் இந்தியாவில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் போன்றவர்களின் சமாதிகளுக்கு சென்று, மண் சேகரித்து அதைக் கொண்டு ஜம்மு காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க முடிவு செய்துள்ளார்.

முதற்கட்டமாக, அவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். தொடர்ந்து, கார்கில் மற்றும் இதர போர்களில் உயிர் நீத்தவர்கள் என இதுவரை 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார்.  இதற்காக அவர் 60 ஆயிரம் கி.மீ. பயணித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைய காரணமாக இருந்த இந்திய ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் மானேக்‌ஷா கல்லறை அமைந்துள்ள ஊட்டி பார்சி கல்லறைத் தோட்டத்திற்கு வந்த உமேஷ், அவரது கல்லறையில் இருந்து மண் சேகரித்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘புல்வாமா தாக்குதலால் மனநிம்மதியை இழந்த எனக்கு நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதனால், நாடு முழுவதும் பயணித்து, நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகள் மற்றும் போரில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இறந்தவர்களின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்து அதனை கொண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க முடிவு செய்தேன். முதற்கட்டமாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து மண் சேகரித்தேன்.

தொடர்ந்து, நாடு முழுவதும் பயணித்து இதுவரை 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளேன். 2021 ஏப்ரல் மாதம் 9ம் தேதி இந்த பயணத்தை முடிக்கிறேன். அதுவரை இந்திய நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள், போலீசார், துணை ராணுவ படையினர் என அனைவரின் சமாதிகளிலும் மண் சேகரித்து கொண்டுச் சென்று ஜம்மு காஷ்மீரில் நினைவு தூண் அமைப்பேன்’’ என்றார்.

Related Stories:

>