×

துவங்கிய 2வது ஆண்டிலேயே இழுபறி தூத்துக்குடி மீன்வள மாலுமி கலை தொழில்நுட்ப கல்லூரி தொடர்ந்து இயங்குமா?-மாணவர் சேர்க்கையை துவங்காததால் பெற்றோர் அச்சம்

தூத்துக்குடி : தூத்துக்குடியிலுள்ள இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாததால், தொடர்ந்து கல்லூரி இயங்குமா? என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழக கடல் வணிகத்தின் நுழைவு வாயிலாக இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.

கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் முக்கியமானது மீன்கள். கடல்வாய் உயிரின உணவுப் பொருட்கள் வணிகம் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்புள்ள இந்த தொழில் சார்ந்த படிப்புகளை பயில விரும்பும் மாணவர்கள் அதிகம்.  மீன்வளம் சம்பந்தமான பொறியியல் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், மேலாண்மை படிப்புகள், மீன் உணவு பதப்படுத்தும்படிப்புகள், தரக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறுபடிப்புகள் உள்ளன.

மீன்வள படிப்பிற்கென்றே நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு தமிழகத்தின் முதல் மீன்வளக் கல்லூரியான தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், நாகப்பட்டினத்தில் மீன்வள பொறியியல் கல்லூரியும், குமரி மாவட்டம் பரக்கை, தஞ்சாவூரில் மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், சென்னையில்  மீன்வள தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிறுவனம், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையமும், இயங்கி வருகின்றன.

கடல் வணிகம் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் தூத்துக்குடி தனிச்சிறப்பு பெற்றுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தனிகல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனடிப்படையில், தமிழ்நாடு டாக்டர்.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ‘இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பக் கல்லூரி’ அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 செப்டம்பர் 4ம் தேதி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரியை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்ப கல்லூரி தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் துவங்கப்பட்ட இக்கல்லூரியின் முதலாம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 17 மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். சுயநிதிக் கல்லூரியாக செயல்படும் இக்கல்லூரியின் தொழில்நுட்ப பாடப்பிரிவில் 4 ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் ஆழ்கடல் மீன் பிடி கப்பல்களிலும் வணிக கப்பல்களிலும் வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியும்.

இதனால் இக்கல்லூரியில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும் கல்லூரி தொடங்கப்பட்டது குறித்து மற்ற மாவட்ட மாணவர்கள், பெற்றோர் பலருக்கும் சரிவர தெரியவில்லை. இதனால் முதலாம் ஆண்டில் மாணவர்கள் குறைவான அளவிலேயே சேர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வரை விடுமுறை நீடித்துள்ள நிலையில், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதோடு கல்லூரி செயல்பட அரசு தரப்பில் போதிய நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் இவ்வருடம் கல்லூரி தொடர்ந்து செயல்படுமா? கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் படிப்பும் தொடருமா? இல்லையா? என்ற நிலையும் எழுந்துள்ளது.

இதனால், இக்கல்லூரியில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவர்களும் பெற்றோரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தாண்டு கல்லூரியில் சேருவதற்கு விருப்பத்துடன் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மீன்பிடி தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த கல்லூரி தொடர்ந்து செயல்படுவதற்கு அரசு உரிய அனுமதி வழங்கிடவேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

வசதிகள் வேண்டும்

தூத்துக்குடி இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான வகுப்பு அறைகள், நூலகம், மீன்பிடி தொழிலை கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப வசதிகள், தங்கும் விடுதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி இந்த வசதிகளை எல்லாம் தமிழக அரசின் மீன்வளத்துறை துரிதமாக செய்து கொடுத்திடவேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Technology College ,Thoothukudi Fisheries Sailor Arts , Thoothukudi: Undergraduate Fisheries Sailor in Thoothukudi College of Arts and Technology this year
× RELATED எஸ்ஆர்எம் கல்லூரியில் கருத்தரங்கம்;...