×

‘10 லட்சம் பேருக்கு வேலை’.. தேஜஸ்வி யாதவின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் ‘செம ரெஸ்பான்ஸ்’ : கலக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி!!

பாட்னா, ‘நாங்கள் வெற்றி பெற்றால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை’ என்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் பிரசாரம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘யாராலும் முடியாது. எங்கிருந்து சம்பளம் கொடுப்பார்கள்? ஜெயிலில் அமர்ந்து ரூபாய் நோட்டு அச்சிடுவார்களா?’ என்று முதல்வர் நிதிஷ்குமார் எதிர் பிரசாரம் செய்து வருகிறார். ஆனாலும் சமீபத்தில் நடந்த கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயக கட்சியை விட, மெகா கூட்டணி 2.5 சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

பீகாரில் சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் அக்.28, நவ.3 மற்றும் 7ம் தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. . வாக்கு எண்ணிக்கை நவ.10ல் நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதி 71 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக நவ.3ம் தேதி 94 தொகுதிகளுக்கும், 3ம் கட்டமாக நவ.7ம் தேதி 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தற்போதைய முதல்வரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 18 தொகுதிகள் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள விகாஸ்சீல் இன்சான் கட்சிக்கும், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்றொரு புறம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மகாகட்பந்தன் (மெகா கூட்டணி) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 19 இடங்களிலும் சிபிஐ 6 இடங்களிலும், சிபிஎம் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.4வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என நம்பிக்கையுடன் நிதிஷ்குமார், பிரசாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் நடந்த கருத்துக்கணிப்புகளும் அவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, கலக்கி வருகிறார்.

குறிப்பாக ‘10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை’ என்ற தேஜஸ்வியின் பிரசாரத்திற்கு மக்களிடம் ‘செம ரெஸ்பான்ஸ்’. இதனால் அவரது பிரசாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 10 லட்சம் பேருக்கு எப்படி வேலை கொடுப்பார்? அதற்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா? ஜெயிலில் அவர் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியில் உள்ளாரா? என்று முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய பிரசாரத்தில் காட்டமாக கேட்டுள்ளார்.
அதற்கு தேஜஸ்வி யாதவும் சளைக்காமல் பதிலடி கொடுத்திருக்கிறார். தினமும் குறைந்தது 12 பிரசார பொதுக்கூட்டங்களில் தேஜஸ்வி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பிரசாரத்தில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: 15 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருக்கிறார். எப்படி வேலை கொடுக்க முடியும் என்று கேட்கிறார். இதுதான் இவரது ஆட்சியின் லட்சணம். நானும் துணை முதல்வராக பதவி வகித்திருக்கிறேன். எப்படி இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்பது எனக்கு தெரியும். நீர் வாழ்க்கை பசுமை திட்டம் என்ற பெயரில் 24 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார். அதில் பாதிக்கும் மேல் அவரும், அவரது கட்சியினரும் சுருட்டி விட்டனர். மேலும் இந்த பிரசாரத்தில் தனது முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, அவரது விளம்பர செலவு மட்டும் 500 கோடி ரூபாய்.
இதை எல்லாம் ஒழுங்காக செய்திருந்தால், 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிலாம்.

எனக்கு 30 வயதே ஆகிறது. என்னை பார்த்து நீங்கள் பயப்படவில்லை என்றால், எதற்காக இந்த சிறியவன் பின்னால், உங்களது 10 ஹெலிகாப்டர்கள் தொடர்கின்றன? இவ்வாறு அவர் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து முழங்குகிறார். இந்த கேள்விகள் நிதிஷ்குமாரை எரிச்சலடைய செய்திருக்கின்றன என்பது அவரது நேற்றைய பிரசாரத்தில் தெரிந்தது. அவர் தனிப்பட்ட தாக்குதலை இப்போது கையில் எடுத்திருக்கிறார். தேஜஸ்விக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
தேஜஸ்வியின் தந்தை சந்திரிகா ராய், ஜனதா தள வேட்பாளராக பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார்.  
நேற்று அங்கு நடந்த நிதிஷ்குமார் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘இதோ இந்த மேடையில் ஐஸ்வர்யா அமர்ந்திருக்கிறார். நன்கு படித்த பெண்ணான அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இவர்களுடைய திருமணத்திற்கு நானும் சென்று வாழ்த்தியிருக்கிறேன். இப்போது இவரது நிலை, எனக்கு துயர் அளிக்கிறது. மனைவியாக வந்த ஒரு பெண்ணை, மதிப்பாக நடத்த தெரியாத அவரால், மாநிலத்தை எப்படி வழி நடத்த முடியும்?’ என்று பொங்கினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் மேற்கொண்ட கருத்துகணிப்பில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்கட்சி கூட்டணிக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் ெவறும் 2.5 சதவீதம் மட்டுமே. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  34.4 சதவீத வாக்குகளும், மெகா கூட்டணிக்கு 31.8 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என இந்த லேட்டஸ்ட் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது நடந்த கருத்து கணிப்புகளில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணியை விட 6 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது. இப்போது இடைவெளி குறைந்துள்ளதால், உற்சாகத்தில் மெகா கூட்டணி கட்சிகளும், கலக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் உள்ளன.

Tags : Tejaswi Yadav ,National Democratic Alliance ,campaign , Tejaswi Yadav, Campaign, National Democratic Alliance
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு...