வெளிமாநில தொழிலாளர்களால் ரயில்வேக்கு ரூ. 2,000 கோடி இழப்பு : ரயில்வேத்துறை விளக்கம்!!

புதுடெல்லி, :ரயில்வேயின் வருமானம் குறித்து மத்திய பிரதேச சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார். அதற்கு ரயில்வே துறை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏப்., மே, ஜூன் மாதங்களில் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், ரயில்வேயின், 167 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அதிக அளவு கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டது. அதனால், முதல் காலாண்டில், பயணியர் கட்டணம் மூலம், ரயில்வேக்கு, 1,066 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அதே நேரத்தில் இரண்டாம் காலாண்டில், 2,325 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும் நடப்பாண்டில், ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் பாதிக்கப்படும். இரண்டு காலாண்டுகளையும் சேர்த்து, பயணியர் கட்டணம் மூலம், 1,258 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த, 2019-20 நிதியாண்டில், பயணியர் கட்டணம் மூலம், ரயில்வேக்கு, 26 ஆயிரத்து, 642 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

அதே நேரத்தில், சரக்கு ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு இல்லை.கடந்த நிதியாண்டில் ஏப்.- செப். காலகட்டத்தில், 54 ஆயிரத்து, 232 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில், 49 ஆயிரத்து, 347 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப, சிறப்பு ரயில்கள் இயக்கியதில், ரயில்வேக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>