மணிஷ் பாண்டே, விஜயசங்கர் ரன் குவிப்பு: சன்ரைசர்ஸ் அபார வெற்றி

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 156 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் வில்லியம்சன் (காயம்), பாசில் தம்பிக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர், ஷாபாஸ் நதீம் இடம் பெற்றனர். ராஜஸ்தான் அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது.

உத்தப்பா, ஸ்டோக்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உத்தப்பா 19 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அடுத்து பென் ஸ்டோக்சுடன் சாம்சன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். சாம்சன் 36 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டோக்ஸ் 30 ரன் (32 பந்து, 2 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ராயல்ஸ் 86 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. பட்லர் 9 ரன் எடுத்து விஜய் ஷங்கர் பந்துவீச்சில் நதீம் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஸ்மித் 19 ரன், பராக் 20 ரன் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. திவாதியா 2 ரன், ஆர்ச்சர் 16 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 4 ஓவரில் 33 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். விஜய் ஷங்கர், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடராஜன் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. அவர் 4 ஓவரில் 46 ரன் வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர்.

வார்னர் 4 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து பேர்ஸ்டோவும் 10 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் போல்ட் ஆனார்.  இதைத் தொடர்ந்து மணிஷ் பாண்டேவுடன் விஜயசங்கர் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் 156 எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 156 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிபட்சமாக பாண்டே 8 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 47 பந்தில் 83 ரன் அடித்தார். விஜயசங்கர் 52 ரன் எடுத்து பாண்டேவுக்கு துணையாக நின்று அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.

Related Stories:

>