×

8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்

* சுற்றுலா, மருத்துவ ‘விசிட்’களுக்கு தடை
* மின்னணு விசாவும் வழங்கப்பட மாட்டாது

புதுடெல்லி: வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு விசா அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. உடனடியாக, இது அமலுக்கு வந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய போது, வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு தடை விதித்து, உள்துறை அமைச்சகம் கடந்த  பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு கொரோனா உச்சத்துக்கு சென்றதால், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. வெளிநாட்டில் தவித்த இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மற்றபடி, சர்வதேச அளவில் போக்குவரத்து முடங்கியது.

 இந்நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியா வருவதற்கான விசா விதிகளைத் தளர்த்தி, உடனடி அனுமதி வழங்கி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருவதையும், வெளிநாடுகளுக்கு செல்வதையும் தடுக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. தற்போது, விசா மற்றும் வெளிநாட்டுப் பயண விதிகளில் தளர்வுகள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பான்மை பிரிவில் உள்ளவர்களுக்கு விசா அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி,

*  வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்த செல்ல இனி தடையில்லை.
* இந்தியாவுக்கு விமானம் மூலமாகவே, கப்பல் மூலமாகவோ வந்து செல்லலாம்.
* விமான நிலையங்கள், துறைமுகங்களில் வழக்கமான குடியுரிமை பரிசோதனைகள் நடைபெறும்.
* சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக விதிகளின்படி, வந்தே பாரத் மற்றும் இரு நாடுகளிடையேயான தற்காலிக விமான போக்குவரத்து ஏற்பாடுகளின் மூலம் வந்து செல்லலாம்.
* அதே நேரத்தில், கொரோனா தொடர்பாக தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* இந்தியாவுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட பிரிவை சேர்ந்தவர்கள் வைத்துள்ள தற்போதைய விசா காலாவதி ஆகியிருந்தால், அவர்கள் புதிதாக விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல விசா அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

போக்குவரத்து துறை மீளுமா?
கொரோனா பரவலால் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விசா தளர்வுகளால் போக்குவரத்துத் துறையினர், பயண ஏற்பாட்டாளர்கள் ஓரளவு மீள வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், சுற்றுலா மற்றும் மருத்துவத்துக்காகவே ஏராளமான வெளிநாட்டவர் இந்தியா வந்து செல்கின்றனர். எனவே, முழு கட்டுப்பாடும் நீங்கினால்தான் விரைவில் மீண்டு வர முடியும் என விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

யார் யாருக்கு
அனுமதி?
1.வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்
2.இந்திய வம்சாவளியினர்
3.வெளிநாட்டினர்

அனுமதி மறுப்பு
1.சுற்றுலா விசா
2.மருத்துவ சிகிச்சைக்கான விசா
3.மின்னணு விசா

Tags : Central Government ,foreigners ,India , After 8 months, the Central Government lifted the visa restrictions for foreigners to enter India
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....