அதிபருக்கு மீண்டும் அதிக அதிகாரம் வழங்கும் 20வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது: ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன

கொழும்பு: இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய 20ஏ அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அதிபருக்கு மீண்டும் அதிக அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் கடந்த 2015ல் மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக இருந்தபோது, அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் 19ஏ  திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும், அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவர்கள் 3வது முறையாக போட்டியிட முடியாத நிலை உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் இந்தாண்டு அடுத்தடுத்து நடந்த அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்றனர். அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் தற்போது பதவி வகிக்கின்றனர். இவர்கள், அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 19ஏ அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின்போதே அறிவித்தனர். அதன்படி, பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றதும் 20ஏ அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சமீபத்தில், இலங்கையின் சக்தி வாய்ந்த மூன்று புத்தமத துறவிகளும் கூட எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒருசில மாற்றங்களுடன் நேற்று முன்தினம் இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்தது.

 2 நாட்கள் நடந்த விவாதத்தின் முடிவில், நேற்றிரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 223 பேரில், மசோதாவுக்கு ஆதரவாக 156 உறுப்பினர்களும், எதிர்த்து 65 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம், மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் 20ஏ  அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 6 எம்பி.க்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

Related Stories:

>