×

ரூ.4 கோடி தங்கம், வைரம் நகைகள் கொள்ளையடித்த விவகாரம் கொள்ளையனின் 45 நிமிட வீடியோ காட்சி சிக்கியது: குற்றவாளியை நெருங்கியது தனிப்படை

சென்னை: தி.நகரில் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், கொள்ளையனின் 45 நிமிடம் வீடியோவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர் மூசா தெருவில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் முதல் தளத்தில் ‘உத்தம் ஜுவல்லரி’ என்ற பெயரில் ராஜேந்திர பாபு என்பவர் தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை ராஜேந்திரபாபு கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ 125 கிராம் தங்கம் கலந்த வைர நகைகள், அரை கிலோ தங்க கட்டி மற்றும் 15 கிலோ வெள்ளி நகை மற்றும் கட்டிகள் என மொத்தம் 20 கிலோ கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்துள்ளனர். கடை மற்றும் கடையின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு கட்டிடத்தின் பின்பக்கம் வழியாக மதில் சுவரை ஏறி உள்ளே வந்தது தெரியவந்தது. டி-சார்ட் மற்றும் பேன்ட் அணிந்து இருந்த நபர் கடையினுள் 45 நிமிடங்கள் இருந்துள்ளார். அப்போது ஒவ்வொரு லாக்கர் பூட்டையும் உடைக்கும்போது, வெளியே இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்துள்ளார். இதுபோல் 10க்கும் மேற்பட்ட முறை கொள்ளையன் கடையின் உள்ளே இருந்து வெளியே வந்து பார்த்துவிட்டு சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டி வந்த வழியாகவே சென்றதும் தெரியவந்தது.

கடை முன்பக்கம் செக்யூரிட்டி இருந்துள்ளார். ஆனால் அவர் பின்பக்கம் வரவில்லை. இதை கொள்ளையன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களுடன் தப்பி ஓடி உள்ளான். லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய சில ஆயுதங்களை கொள்ளையன் விட்டு சென்றதை போலீசார் கைப்பற்றினர்.சிசிடிவியில் பதிவான காட்சியில் உள்ள கொள்ளையன் வடமாநிலத்தவர் போல் இல்லை என்றும், உள்ளூர் கொள்ளையன் போன்று இருப்பது தெரியவந்தது. கடையில் எப்போது மொத்தமாக நகைகள் வரும் என்று நன்றாக தெரிந்த நபர் தான் கைவரிசை காட்டி இருக்க முடியும் என தனிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதேநேரம், சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் புகைப்படங்களை பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது, பழைய குற்றவாளி ஒருவனின் உருவத்துடன் புகைப்படம் ஒத்துபோனதாக தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் ஒன்றில் இருந்து அடிக்கடி அழைப்பு சென்றது தெரியவந்துள்ளது. அந்த செல்போன் எண்ணின் உரையாடல்களை வைத்து குற்றவாளியை தனிப்படையினர் உறுதி செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை கிடைத்துள்ள தகவலின் படி கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டதை தனிப்படை உறுதி செய்துள்ளனர். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : affair ,robber , Rs 4 crore gold, diamond jewelery robbery case 45 minute video of the robber caught: Close to the culprit personal
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...