கோவளத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் சென்றபோது, கோவளத்தில் திமுக தொண்டருடன் டீ கடையில் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் குடித்தார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாரத்தில் 3 நாட்கள் காலை நேரத்தில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல், நேற்று காலை 8 மணிக்கு கோவளத்தில் இருந்து சைக்கிளில் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் இசிஆர் சாலையில் செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குபட்டு, வடநெம்மேலி முதலைப்பண்ணை வரை சைக்கிளில் வந்தார். கோவளத்தில் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்தபோது, அங்கு சாலையோரம் வாக்கிங் சென்ற திமுக தொண்டர் சிக்கந்தர் பாய் என்பவரை சந்தித்தார்.

அவரை அழைத்து அன்போடு நலம் விசாரித்தார். கடந்த 1962ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக உள்ள சிக்கந்தர் கோவளம் மீனவர் குப்பத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த ஒரு மாதமாக உடல்நலம் சரி இல்லாமல் இருந்துள்ளார். இதை அறிந்து மு.க.ஸ்டாலின் அவரை கூப்பிட்டு நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்பு, கோவளத்தில் உள்ள ஒரு டீ கடையில் அவருடன் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் அருந்தினார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சிக்கந்தர் கோவளம் ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், அங்கிருந்து ஸ்டாலின் காரில் ஏறி சென்னை புறப்பட்டு சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர்.

Related Stories:

>