×

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டும் விற்பனை

சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45 என ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வெங்காயம் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் மக்களிடம் பணம் இல்லாத நிலையில், வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சுமார் 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் பெரிய வெங்காயம் விலை ரூ.45க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அனைத்து பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் விற்கப்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காமதேனு கடையில் நேற்று வெங்காயம் வாங்க வந்த பெண்கள் கூறும்போது, “ வெங்காயம் கிலோ ரூ.100க்கு மேல் விற்கப்படுவதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி தமிழகத்தில் விற்பனை செய்கிறது.

அரசால் ரூ.45க்கு விற்கும்போது, தனியார் கடைகள் மட்டும் ஏன் இந்த விலைக்கு விற்க முடியவில்லை. அவர்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துதான் வாங்கி வந்து விற்கிறார்கள். அரசு அதிகாரிகள் இடைத்தரகர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தனியார் கடைகளிலும் வெங்காயம் விலை குறையும். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த அளவே வெங்காயம் உள்ளது. முதலில் வருபவர்களுக்கு நல்ல வெங்காயம் கிடைக்கிறது. போக போக தரம் இல்லாத வெங்காயம் வாங்கும் நிலை உள்ளது. ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது” என்றனர்.

அதேநேரம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 50, 60 லாரிகளில் மகாராஷ்ராவில் இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் வரத்து தற்போது 20 லாரியாக குறைந்துள்ளது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் வெங்காயம் போன்று இல்லாமல் எகிப்து வெங்காயத்தில் சுவை, காரம் குறைவாக இருக்கிறது. ஒரு வெங்காயத்தின் எடை மட்டுமே 200 கிராம் வரை இருக்கிறது. ஆனாலும் சமையலுக்கு வெங்காயம் தேவை என்பதால் அந்த வெங்காயத்தையும் மக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் எகிப்து வெங்காயம் வரத்து அதிகரிக்கும்போது கிலோ ரூ.50 வரை விற்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : consumer stores , Farm Green consumer stores sell only 2 kg of onions per person
× RELATED பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில்...