×

செல்போன் கொள்ளை கும்பலை பிடிக்க ம.பி. விரைந்தது போலீஸ்

சூளகிரி: சூளகிரி அருகே கன்டெய்னரை கடத்தி ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார், மத்திய பிரதேசம் விரைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், காட்டவாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக் கொண்டு, கன்டெய்னர் லாரி கடந்த 20ம் தேதி இரவு மும்பைக்கு புறப்பட்டது. லாரியை கோவையை சேர்ந்த அருண்குமார்(34) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஷா (29) இருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை என்னும் இடத்தில், நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் லாரி சென்ற போது, 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 10 பேர், 3 லாரிகளில் பின் தொடர்ந்து வந்து, கன்டெய்னர் லாரியை வழிமறித்து டிரைவர்களை தாக்கி லாரியை கடத்தி சென்றனர். அழகுபாவி என்ற இடத்தில் நிறுத்தி, ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை தங்கள் லாரிகளுக்கு மாற்றி கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர், நேரில் சென்று விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா என்ற பிரபல கொள்ளையன் தலைமையிலான கும்பலுக்கு, இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிப்பதற்காக, மத்திய பிரதேச மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Tags : cell phone robbery gang Police , Cell phone, robbery gang, catch, m.p. Rushed, police
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை