×

சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,’ என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடந்த ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தினமும் ஆன்லைனில் பதிவு செய்த 250 ேபருக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இந்நிலையில், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. அப்போது, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களையும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் 2,000, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களையும் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலை சிறப்பு ஆணையாளர் மனோஜ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதில் சில மாற்றங்களை செய்யும்படி தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* மண்டல, மகரவிளக்கு பூஜைகளின் போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
* நிலக்கல்லில் பக்தர்கள் ஓய்வு எடுக்க அனுமதியில்லை என்பது சரியல்ல.அங்கு அவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
* வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவு கொடுக்காமல் இருப்பது முறையல்ல. எனவே,  எல்லா பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து தரிசனத்திற்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் பம்பை வரை போகலாம்: கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில், ‘பக்தர்களின் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தக்கூடாது.  சபரிமலையில் குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், 15 இருக்கைகள் கொண்ட பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கலாம். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்ட பிறகு, அந்த வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Sabarimala High Court ,Capricorn Lantern Season ,devotees ,Kerala High Court , Sabarimala High Court to increase number of devotees during Capricorn Lantern Season: Kerala High Court orders action
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி