×

அணைக்கட்டு அருகே மலைக்கிராம சாலையின் சேற்றில் சிக்கிய கார்கள் : நடந்தே சென்ற அமைச்சர், கலெக்டர்

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய மலைகிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. ஆர்டிஓ கணேஷ் வரவேற்றார். எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், ஆவின் தலைவர் வேலழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் 15 அரசுத்துறைகளின் சார்பில் ₹4 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் மலையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு  மருத்துவ வசதி வழங்கும் வகையில் வட்டார மருத்துவ அலுவலர் கைலாசத்திடம் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. விழாவில் காட்பாடி பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாசம், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், துணை ஆட்சியர்கள் காமராஜ், முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்து அமைச்சர் வீரமணி, கலெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் தங்களின் கார்களில் திரும்பினர். அப்போது மழை பெய்தது.

இதனால் கரடுமுரடான மண் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதில் அமைச்சர், கலெக்டர் உள்பட அனைவரின் கார்களும் சிக்கிக் கொண்டு நகர முடியவில்லை. நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியாத நிலையில் அமைச்சர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் 2 கி.மீ தூரம் சேற்றிலேயே நடந்து சென்றனர். இதைப் பார்த்த மலைவாழ் மக்கள், நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத இவர்கள், இப்போது நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்போம் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்று கூறியபடியே அமைச்சர் மற்றும் கலெக்டர் கார்களை டிராக்டர் மூலம் இழுத்து மீட்டு கொடுத்தனர்.

வாக்கு கேட்டு வாபஸ் பெற்ற அமைச்சர்
பீஞ்சமந்தையில் நடந்த விழாவில் அமைச்சர் வீரமணி பேசுகையில், ‘அதிமுக அரசால் நிறைய திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், ‘இது அரசு விழா. இதில் கட்சியை பற்றியும், சின்னத்தை பற்றியும் பேசுவது தவறு. நீங்கள் பேசினால் நாங்களும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசுவோம். நான் சட்டமன்றத்தில் பலமுறை இக்கிராமத்துக்கு சாலை வசதி குறித்து பேசினேன் என்றார். இதையடுத்து அமைச்சர் வீரமணி தனது பேச்சை வாபஸ் பெறுவதாக கூறினார்.

‘உடனடியாக சாலை வேண்டும்’
வேலூர் எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் பேசும்போது, ‘பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய 3 ஊராட்சிகளிலும் மழைக்காலங்களில் அடிக்கடி 3 முதல் 4 நாட்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும். இப்பகுதியில் உடனடியாக சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை பயனாளிகளின் ஊரிலேயே சென்று வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : village road ,dam ,Minister , Cars stuck in the mud on the hill village road near the dam: Minister, Collector walking
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்