×

கன்னியாகுமரி - திப்ரூகர் ரயிலால் குமரியில் பல ரயில்கள் இயக்கம் தாமதமாகும்: வாராந்திர சேவையில் இருந்து தினசரி ரயிலாக மாற்றம்

நாகர்கோவில்: கன்னியாகுமரில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் என்ற இடத்துக்கு 2011 ம் ஆண்டு பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக தூரமாக 4273 கி.மீ. இயக்கப்படும் ரயில் இது. கொச்சுவேலியிருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு பின்னர் புதிய நிரந்திர ரயிலாக கொச்சுவேளி ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படும் என்று கருதிய நிர்வாகம் கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் தற்போது வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இடநெருக்கடி ஏற்படும். ஒருவழிபாதையாக உள்ள கன்னியாகுமரி- திருவனந்தபுரம் பாதையிலும் அதிக அளவில் டிராக் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையில் தற்போது இயங்கிவரும் பழைய ரயில்கள் கால அட்டவணையில் மாற்றம் செய்து அதிக நேரம் கிராசிங் ஆக நிறுத்தி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்த தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களின் பயணநேரமும் அதிகரிக்கும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் 72 கி.மீ. தூரம் உள்ள பாதையை பயணம் செய்ய இனி காலை,மாலையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் சுமார் 2 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

கன்னியாகுமரி திருநெல்வேலி 56717 பயணிகள் ரயில் நாகர்கோவிலுடன் நிறுத்தப்பட்டு நாகர்கோவில் - திருநெல்வேலி என்று இயக்கப்படும். இதேபோல் மற்றொரு பயணிகள் ரயிலான புனலூர் - கன்னியாகுமரி 56715- 56716 பயணிகள் ரயில் நாகர்கோவிலுடன் நிறுத்தபட்டு நாகர்கோவில் - புனலூர் என்றே இயக்கப்படும். ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மழைகாலங்களில் கொச்சுவேலியுடன் நிறுத்தம் செய்யப்பட்டு கொச்சுவேலி  திருநெல்வேலி மார்க்கங்களில் இயக்கப்படாது. அடுத்து கன்னியாகுமரி  சென்னை ரயில் கன்னியாகுமரியிலிருந்து 17:20க்கு பதிலாக 17:05-க்கு புறப்படுமாறு மாற்றம் செய்யப்பட்டு இந்த ரயிலின் பயணநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி - திப்ருகர் ரயில் 2000 கி.மீ.க்கு மேல் பயணம் செய்யும் என்பதால் கன்னியாகுமரி, திப்ருகர் என 2 இடங்களிலும் பிட்லைன் பராமரிப்பு செய்ய வேண்டியுள்ளது. இனி இந்த ரயில் காலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு காலிபெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பராமரிப்புக்கு என கொண்டுவரப்படும். இவ்வாறு வந்த பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்று மீண்டும் மதியத்துக்கு மேல் காலிபெட்டிகள் கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு பின்னர் கன்னியாகுமரியிலிருந்து திப்ரூகர் ரயிலாக இயங்கும். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு தினசரி செய்யப்படும்.

இவ்வாறு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பிட்லைன் இடநெருக்கடியாக இருக்கின்ற காரணத்தால் புதிய ரயில்கள் இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களில் எதாவது ஓரு தினசரி ரயிலை திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில்பாதை ரயில் டிராக் நெருக்கடி நிறைந்த காரணத்தால் ரயில் நீட்டிப்பு செய்து இயக்க முடியாது என்று ரயில்வேத்துறை மறுத்து வருகின்றது.

ஆனால் கன்னியாகுமரி  திப்ருகர் தினசரி ரயிலாக மாற்றம் செய்ய எந்த ஒரு ரயில் டிராக் நெருக்கடி பிரச்சனையும் இல்லை. இந்த ரயில் கேரளா பயணிகளின் நன்மைக்காக இயக்கப்படுகின்ற காரணத்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ‘நாகர்கோவில் - திருவனந்தபுரம் இருப்புபாதையில் அளவுக்கு அதிகமாக ரயில்கள் இயக்கி டிராக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்ற தெரியாது. இந்த தடத்தில் ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு என சில மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த ரயில் இவ்வாறு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயங்குவதால் தண்டவாள பராமரிப்பு பணிகள் செய்யமுடியாத நிலை உள்ளது. இது இந்த தடத்தில் இயங்கும் மற்ற ரயில்களை வெகுவாக பாதிக்கும். இந்த தடத்தில் தண்டவாள பராமரிப்பு செய்ய முடியாமல் டிராக் உடைதல், கிராக் வருதல் போன்ற எதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இதற்கு முழுக்க முழுக்க தெற்கு ரயில்வே அதிகாரிகளே பொறுப்பு ஆகும்’ என்றனர்.

Tags : Dibrugarh ,Kanyakumari ,Kumari , Kanyakumari-Dibrugarh train delays several trains in Kumari: Change from weekly service to daily train
× RELATED தினசரி ரயிலாக இயக்க வாய்ப்புள்ள...