கொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பாட்னா: கொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ம் தேதி என மூன்று  கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். அவரது கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைந்துள்ளது. அதே போல, காங்கிரஸ்,  இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில்; பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

பீகாரில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்; கொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல. நோய் பற்றி மக்கள் அச்சத்தையும், மரண பயத்தையும் பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறது எனவும் குற்றம் சாடியது.

Related Stories: