×

ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிரந்தரமாக தடை செய்க: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை : ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக, நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 22) வெளியிட்ட அறிக்கை:

உலகநாடுகள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அபரிமிதமான வளர்ச்சி மிகுந்த வரவேற்கத்தக்கதுதான். பல நேரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டையும், நாட்டு மக்களையும், முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கின்றன. ஆனால், சில நேரங்களில் அதே தொழில்நுட்பத்தால் வீழ்ச்சியையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

படித்த, வசதிப்படைத்த இளைஞர்கள் தற்போது ஆன்லைன் விளையாட்டுக்களை பொழுதுபோக்குக்காக விளையாட ஆரம்பிக்கின்றனர். இவர்களை காலப்போக்கில் சில நிறுவனங்கள் தவறான பாதையில் அழைத்து செல்கின்றன. நாட்கள் ஆக ஆக இளைஞர்களின் மனதை கவர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அளித்து மயக்கி பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் ரம்மி விளையாட்டாக மாற்றி விட்டன. முதன் முதலாக ஆன்லைன் ரம்மி விளையாடும்போது ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருந்தாலும் போகப் போக இந்த விளையாட்டுக்கு தங்களை அடிமைகளாக ஆக்கி அதில் இருந்து மீள முடியாமல் பணத்தை இழக்கின்றனர்.

பலபேரிடம் கடன் வாங்கி, திரும்ப கொடுக்க முடியாமல் அவமானப்பட்டு மரியாதையை இழக்கின்றனர், தனது சொத்தை இழக்கின்றனர். அதற்கும் மேலாக பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தற்கொலை செய்து உயிரையே இழக்கின்றனர்.

சில காலமாக பத்திரிகை செய்திகளைப் பார்ப்போமேயானால் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறது. உதாரணமாக செங்குன்றத்தை சேர்ந்த 28 வயதே ஆன தினேஷூம் தருமபுரியில் அண்ணா நகரை சேர்ந்து காவல்துறையில் பணிபுரியும் 28 வயதான வெங்டேஷூம் புதுவை மாநிலத்தில் வில்லியனூர் அருகே சேக்காடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான விஜயகுமார் ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலை மேலும் நீடிக்கக் கூடாது. இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் எந்த சட்டமும் இல்லை.

நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா போன்ற மாநிலங்களில், இவற்றை கண்காணிக்கவும், ஒழுங்குப்படுத்தவும் விளையாட்டு சட்டங்களை திருத்தியுள்ளன. அதேப் போல் மத்திய, மாநில அரசுகள், வருங்கால சந்ததியினரை சீரழிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக, நிரந்தமாக தடைசெய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Tags : GK Vasan , Online, Gambling, GK Vasan, Request
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...