×

ஆந்திரத்தில் ஜெகன் சொன்னதை செய்கிறார்.. ஆனா இங்கு ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை : எடப்பாடி அரசு மீது ராமதாஸ் தாக்கு!!


சென்னை : இங்குள்ள ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்பு அதிமுக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார். மக்கள் நலத்திட்டங்களை சரிவர செய்வதில்லை என்றும் தொடர் குற்றச்சாட்டுக்களை வைத்து வந்தார். இந்தநிலையில், 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அப்போதில் இருந்தே அதிமுக அரசை விமர்சிப்பதை நிறுத்தினார்.

இதேபோல், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி தொடருமா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆந்திரத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால், இங்குள்ளவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என கடுமையாக சாடியுள்ளார்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசை திடீரென்று விமர்சனம் செய்துள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கூட்டணியில் இருந்து வெளியேறி, கடந்த சட்டப்பேரவை தேர்தலைப்போல தனித்து போட்டியிடப் போகிறாரா? அல்லது அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுக்காக இந்த மிரட்டலில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது மாற்றுக் கூட்டணியில் சேர திட்டமிட்டுள்ளாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Tags : Jagan ,Andhra Pradesh ,government ,rulers ,Edappadi ,attack ,Ramadas , Edappadi Government, Ramadas, Attack
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்