×

சொந்த காரை சவாரிக்கு இயக்க எதிர்ப்பு: வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார் ஓட்டுனர்கள் முற்றுகை

பெரம்பலூர்: பாடாலூரைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, பாடாலூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள், ஊட்டத்தூர் பிரிவு ரோட்டில் கார் ஸ்டேண்டு அமைத்து, வாடகை சவாரிக்குச் சென்று, வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாடாலூர் கார் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் மகாமுனி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் முத்துசாமி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலரும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாங்கள் சுமார் 10 வருடங்களாக பாடாலூர் ஊட்டத்தூர் சாலையில் வாடகைக்கார்கள் வைத்து இயக்கி வருகிறோம். தற்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலநபர்கள் தங்களது சொந்த கார்களைக் கொண்டு வந்து, எங்களது கார் ஸ்டாண்டு அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு, எங்களுக்குப் போட்டியாக எங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை மடக்கி கார் சவாரி நடத்தி வருகின்றனர். இத னால் எங்களுக்கும், அவர் களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. பிழைப்புக்காக முறையாக வரி செலுத்தி இயக்கிவரும் எங்களுக்குப் போட்டியாக தங்களது சொந்தக் கார்களை கொண்டு வந்து நிறுத்தி எங்களுக்கு வரும் சவாரி ஆட்களை மடக்கிச்சென்று, எங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் சொந்த கார் வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Tags : Rental car drivers , Rental car, drivers, siege
× RELATED எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி...