×

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயார் : விநியோகிக்க உதவுமாறு மருந்து கம்பெனிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி, கொரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் விநியோகிக்க உதவுமாறு, அனைத்திந்திய மருந்து கம்பெனிகளின் கூட்டமைப்பு (ஆல் இண்டியா கெமிஸ்ட் அண்ட் டிரக்கிஸ்ட் அசோசியேசன்) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகை அச்சுறுத்தி 11 லட்சத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ள கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

கொரோனாவுக்கு 2 வகையான தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்று ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் தன் பங்கிற்கு ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக மறைமுகமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும், மருந்து கம்பெனிகளும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கவில்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், சுய கட்டுப்பாடுகளுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த உடன், நாடு முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவித்தார். இதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகின. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதனும், 2021 துவக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்திந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜே.எஸ்.ஷிண்டே மற்றும் பொது செயலாளர் ராஜிவ் சிங்கால் ஆகியோர், கொரோனா தடுப்பு மருந்துகளை நாடு முழுவதும் விநியோகிக்க தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அபாயகரமான கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டறியும் முயற்சியில் முன்னணி மருந்து கம்பெனிகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் 100 மருந்துகள் 2ம் கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன. இந்தியாவில் 3 மருந்துகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி, மிகக் குறைந்த பக்க விளைவுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே அவற்றில் அதிக வெற்றிகரமானதாக கருதப்படும் இரண்டு தடுப்பு மருந்துகளை தற்போது நாடு முழுவதும் விநியோகம் செய்யலாம். இதற்கான தொடர்பு சங்கிலிகள், உள் கட்டமைப்புகள் உடனடியாக தேவை. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும். இதில் தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,companies ,India , India, Corona, Vaccine, Prime Minister Modi, Letter
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!