×

குஜிலியம்பாறையில் சாலை பணியின் போது குடிநீர் குழாய்கள் தொடர்ந்து சேதம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய்கள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தொட்டணம்பட்டியில் இருந்து டி.கூடலூர் வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக இவ்வழித்தடத்தில் உள்ள பாலங்கள் முழுவதும் அகற்றும் பணி நடக்கிறது. தொடர்ந்து இடவசதி உள்ள இடத்தில் சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள பாலத்தை அகற்றுவதற்கு, போக்குவரத்து வசதிக்காக பாலத்தை ஒட்டியவாறு மாற்றுப்பாதை அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்தது. குடிநீர் குழாய் உடைப்பை பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்தனர். ஆனால் அன்றைய தினமே அச்சாலையில் உள்ள மற்றொரு பாலத்தில் நடந்த பணியின் போது குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் பேரூராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுவதால், பேரூராட்சி நிர்வாகத்தால் குடிநீர் சப்ளை சீராக செய்ய முடியவில்லை. குடிநீர் குழாய் உடைந்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால், அவற்றை முழுவதும் வெளியேற்றி குடிநீர் குழாயை சரிசெய்ய 5 நாட்கள் ஆகிறது. இதனால் குஜிலியம்பாறை மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உள்ள இடங்களில் பள்ளம் தோண்டும் போது இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு, ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து எந்த தகவலும் கொடுப்பதில்லை. மாறாக குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியவாறே பணிகளை செய்து வருகின்றனர். குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுவது குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்தாரரிடம் கேட்டால், நாங்கள் ஆளுந்தரப்பினருக்கு நெருங்கிய வட்டாரம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அலட்சியமாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் திண்டாடி வருகின்றனர்.இதேபோல் கடந்த ஜூலை 25ம் தேதி குஜிலியம்பாறை- கம்புகுத்தியூர் சாலையில், சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் நேரில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தபட்டவரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குஜிலியம்பாறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் பல மாதங்கள் குஜிலியம்பாறை சாலையில் தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் நடக்கவுள்ள நிலையில், அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைப்பதும், சேதப்படுத்துவதும் என தொடர்கதையாக நடக்க உள்ளது. இதனால் குஜிலியம்பாறை மக்களுக்கு தொடர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குஜிலியம்பாறை மக்களுக்கு காவிரி குடிநீர் போதுமான அளவு பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க பெற்று வந்த நிலையில், தற்போது தனியார் ஒப்பந்ததாரர் செயலால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road , Kujiliamparai, drinking water pipes
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...