×

பொன்னை அடுத்த மேல்பாடி அருகே ஏரிகளுக்கு நீர் செல்லும் கதவு அடைப்பான்களை உடைக்க முயற்சி

பொன்னை: மேல்பாடி அருகே ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கதவு அடைப்பான்களை சமூக விரோதிகள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த மேல்பாடி கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு பொன்னை ஆற்றிலிருந்து குகையநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் மேல்பாடி ஊருக்கு நடுவில் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக பொன்னை ஆற்றில் இந்தாண்டு தண்ணீர் வந்துள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னை ஆற்றிலிருந்து குகையநல்லூர் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டது.

ஆனால் இந்தக் கால்வாயை தூர்வாராமல் உள்ளதாலும், ஒரு சில சமூக விரோதிகள் கால்வாயை அடைத்துவிடுவதாலும் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதி கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் செல்லாமல் கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தேங்கி நிற்கும் கால்வாய் நீர் செல்வதற்கு வழியில்லாமல் பாசி படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. மேலும், சமூகவிரோதிகள் சிலர் வேண்டுமென்றே பக்கத்து கிராமங்களில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து கால்வாயில் வீசி செல்கின்றனர். எனவே மேல்பாடி கிராமத்திற்கு நடுவே ஓடும் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, தண்ணீர் பாய்ந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சம்பத் மேல்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், இந்த கால்வாய் மூலமாக 14 கிராம ஏரிகளுக்கு நீர் செல்கிறது. ேமல்பாடி அருகே ஏரிகளுக்கு நீர் செல்ல கதவு அடைப்பான்கள் உள்ளது. இதனை சமூக விரோதிகள் சிலர் உடைக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் எஸ்ஐ கார்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lakes ,overpass , Lake, water, door
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...