×

ஆன்மிக தலங்களுக்கு நடுவே அமைந்த கண்ணமங்கலம்: முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்ணமங்கலம் நகரம் நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. கண்ணமங்கலத்தை சுற்றிலும் பிரசித்தி பெற்ற கோயில்களை கொண்டிருப்பதால் திருக்கோயில்களின் சங்கமமாக திகழ்கிறது. கண்ணமங்கலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மலை உச்சி வரை ₹1.2 கோடியில் தார்சாலை போடப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் சிரமமின்றி வாகனங்களில் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் தோன்றினார். முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பேர். இவர்களுக்கு கோயில் வெளிவளாகத்தை சுற்றி தரையில் பிரமாண்ட நட்சத்திர வடிவிலும், ஒவ்வொரு நட்சத்திர முனையிலும் நிற்கின்ற நட்சத்திர வடிவில் ஆறு பேருக்கும் தனி தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கார்த்திகைப் பெண்களுக்கான கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மேலும், இக்கோயிலில் மயில்கள் தோகை விரித்து பறப்பதும், முருகர் பிரகாரத்தை பக்தர்கள் போல சுற்றி வந்து, உள்வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தை மயில்கள் வணங்கி செல்வதும் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இங்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்திற்கு தேவையான திருமண கூடம், வாத்தியம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் இறையருளுடன் இங்கேயே திருமணம் செய்ய அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வருகின்றனர். மலைகளின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இயற்கை அழகின் எழிலான தோற்றமும், இறைவனின் அருளும் சேர்ந்து தேவலோகமாக காட்சியளிக்கிறது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இந்த மலைக்கு வந்து 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதனால் மலையெங்கும் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதால், திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆறு படை வீடுகளுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் 7வது படை வீடாக இக்கோயிலுக்கும் வந்து செல்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கொளத்தூர் கிராமத்தில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் உள்ளது. காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயில் உபயதாரர்களால் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அது முதல் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். கோயில் உள்வளாகத்தில் விநாயகர், முருகர், ஐயப்பன், பெருமாள் என்று தனித்தனி சன்னதிகளும், 63 நாயன்மார் சிலைகளும் உள்ளது. காசி விஸ்வநாதர் மூலவருக்கு வெளியே ராகு, கேது சிலைகள் இருப்பதும், இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள காசி விஸ்வநாதரை வந்து வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்தன்று கோயில் உள் வளாகத்தில் அமைந்துள்ள 43அடி உயர கம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.

திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என்று வேண்டும் வரம் தரும் ஏகாம்பர ஈஸ்வரராக திகழ்கிறார். பல ஆண்டுகளாக பூஜையே இல்லாமல் புதர் மண்டி பாழடைந்து கிடந்த கோயில் இந்த அளவிற்கு மீண்டும் பிரசித்தி பெற்றிருப்பதற்கு இறையருளே காரணம் என சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சிங்கிரி கோயில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. கண்ணமங்கலத்திற்கு ஒருநாள் ஆன்மிக சுற்றுலா வந்தால் அனைத்து கோயில்களையும் சுற்றிப் பார்க்கலாம். வேலூர்- திருவண்ணாமலை சாலையில் இருப்பதால் தொடர் பஸ் வசதியும், கோயில்களுக்கு செல்ல 24மணி நேரமும் ஆட்டோ வசதியும் உள்ளது. கண்ணமங்கலம் மக்கள் தொகை 8,540 பேர், ஆண்கள் 4,217 பேர், பெண்கள் 4,323 பேர் உள்ளனர். வேலூர், ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை நகரங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். கண்ணமங்கலம் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு, துருகம், கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெசவு தொழிலாளிகள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வெளிநாடுகளுக்கு பட்டு சேலைகள் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களது வாழ்வாதாரம் காக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் சிகிச்சை பெறவும், பிரசவம் பார்க்கவும் இங்குதான் வருகிறார்கள். இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி செய்து 20கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது.

இதனால் சிக்கலான பிரசவங்கள், பாம்பு கடி, வெறி நாய் கடி, உள்ளிட்ட ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விடும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்ணமங்கலம் நாகநதிக்கரையில் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் கூடுதலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் தரமற்றதாகவும், எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அவசரகோலத்தில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் பாலம் அருகில் குளம் போல் நீர் தேங்கி போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் நடைபாதையின் இருபுறமும் சமன் செய்யப்படாததால் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. இதை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம், விவி தாங்கல் கிராமங்களுக்கு மினி பஸ், அரசு பஸ் என்று எந்தவித பஸ் வசதியும் இல்லை. இக்கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர் ஆற்காடு, ராணிப்பேட்டைக்கு அதிக அளவில் வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே கண்ணமங்கலம் வரை வரும் ஆற்காடு அரசு பஸ்சை ரெட்டிப்பாளையம் வரை இயக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்பேசாத சிறுவனை பேச வைத்த பெருமாள்

கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள உத்தமராய பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இப்பகுதியில் உள்ள மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் முன்பு, ஒரு பெரியவர் வந்து நின்றார். சிறுவனுக்கு சிறு வயது முதலே வாய் பேச முடியாது. பெரியவர், சிறுவனின் தலைமீது கை வைத்து ஊருக்குள் சென்று நான் வந்திருக்கிறேன் எனச் சொல் என்றார். சிறுவனும் உடனே சென்று, நம்ம ஊர் மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்கார் என்றான். அதுவரை பேசாத சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு ஆச்சரியப்பட்டனர். மலைக்கு வந்த பெரியவர் தன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததைக் கூறினான்.

உடனே அந்த பெரியவர் வந்த இடத்திற்கு வந்தமக்கள் பார்த்தனர். அங்கு சங்கு, சக்கரத்துடன் பெருமாள் சிலை இருந்தது. அதனைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த மக்கள் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். வாய்ப்பேசாத சிறுவனுக்கு பேசும் தன்மையைக் கொடுத்ததால், ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள் என்று பெயர் பெற்றார்.

தாயின் தலையை வெட்டிய பரசுராமர்

ரேணுகாதேவி ஜமத்கனி முனிவரான தனது கணவரின் பூஜைக்காக கமண்டல நதியில் நீர் கொண்டுவர சென்றார். வானவீதியில் சென்ற கந்தவர்வன் முகத்தை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து உடல்முழுவதும் நனைந்தது. அதனை ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்ட ஜமத்கனி முனிவர், மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக்கொண்டு வரும்படி கூறினார். பரசுராமர் தாயின் தலையை வெட்டி கொண்டுவந்தார். அப்போது பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற, முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார்.

தன்தாயை உயிர்பிக்க கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக்கொண்டு வெட்டுப்பட்டு கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு வைத்து தண்ணீர் தெளிக்க உயிர் பெற்றார். இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன், ஜமத்கனிமுனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரை கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய உடல்முழுதும் தீக்காயங்களுடன் வேப்பிலை கட்டியகோலத்தில் மகன் பரசுராமரை சந்திக்கிறாள். பரசுராமர் கடும்கோபமுற்று கார்த்தியவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப சத்திரியகுலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான். பின் சிவபெருமான் விதிச்செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமத்கனி முனிவரை உயிர்தெழசெய்தார். ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டபடி சிரசு மட்டுமே பிரதானமாக கொண்டு இப்பூலகில் பூஜைக்கருவாய் காட்சியளிக்கிறார். அன்னை ரேணுகாம்பாள்.

Tags : women ,Kannamangalam ,Murugan ,Karthika , Thiruvannamalai, Karthikai
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே