×

கொரோனாவால் தீபாவளி வியாபாரம் ‘டல்’ : ஜவுளிகள் வாங்கி குவிக்க சிறு வியாபாரிகள் தயக்கம்

சேலம்: கொரோனா தொற்று பரவல் காரணமாக தொழில்கள் இன்னும் சுறுசுறுப்படையாததால், சிறு வியாபாரிகள் ஜவுளிகள் வாங்கி குவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தி தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அபூர்வா சேலை, கேரளா வேஷ்டி,சேலை,லுங்கி, உள்ளாடைகள்,ஏற்றுமதி காட்டன் ரகங்கள் உள்பட ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர வட மாநிலங்களுக்கும்,வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது ஜவுளிகளின் விற்பனை களைகட்டும். இதற்காக ஜவுளிக்கடைக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், குஜராத் சூரத், டெல்லி,கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சேலை,சுடிதார் ரகங்கள்,பேண்ட், சர்ட் ரகங்கள், குழந்தைகளுக்கான ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனைக்கு வைப்பார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை கழித்து ஜவுளிக்கடைகளில் விற்பனை களைகட்டும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல்,மே மாதங்கள் முழுவதும் ஜவுளி கடைகள் முழுமையாக மூடப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் ஜவுளிகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் வேலைக்கு செல்லாததால், அவர்களின் கையில் இருந்த பணம் கரைந்துவிட்டது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி கடைகளும் காற்று வாங்கியது. தேவைக்கு மட்டும் மக்கள் ஜவுளிகள் வாங்கி வந்தனர்.

அதேபோல் தெருக்களிலும் வீடு மற்றும் சிறிய கடைகளிலும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு 90 சதவீதம் வியாபாரம் இல்லாமல் போனது. இந்நிலையில் வரும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது நடக்கும் வியாபாரம் இருக்குமா என்ற சந்தேகம் சிறிய ஜவுளி வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. பெரிய ஜவுளி கடைகளிலேயே வியாபாரம் குறைந்து இருப்பதால்,தெருக்களில் சிறிய கடைகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் பாதிக்கும். அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள் வாங்கி குவிக்க சிறிய ஜவுளி வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த சிறிய ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சிறிய ஜவுளி வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள நடுத்தர, ஏழை மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.பெரிய ஜவுளிக்கடைகளுக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் தேவை. ஆனால் இதுபோன்ற சிறிய கடைகளில் கடன் கொடுப்பார்கள். மேலும் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜவுளிகள் விற்பனை இருக்கும். இதுபோன்ற சிறிய ஜவுளி வியாபாரிகள் ஈரோடு, திருப்பூர், கரூர்,சேலம் இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சேலை,வேஷ்டி, சுடிதார்,உள்ளாடைகள் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.குறைந்த வருமானத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கடைகளைத்தான் நாடுவார்கள். டந்த தீபாவளி,பொங்கல் பண்டிகையில் வியாபாரம் நல்லமுறையில் இருந்தது.

நடப்பாண்டு கொரோனா காரணமாக பெரிய ஜவுளி கடைகளிலே வியாபாரம் களைகட்டவில்லை. அவர்களே நடப்பாண்டு தீபாவளிக்கு ஜவுளிகள் வாங்கி குவிக்கலாமா என்று யோசித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிறிய ஜவுளிக்கடைகளில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையன்று எதிர்பார்த்த வியாபாரம் இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. எப்போது ஆயுதபூஜைக்கு முன்பு 20 சதவீதம் வியாபாரம்,ஆயுதபூஜைக்கு பிறகு 60 முதல் 80 வியாபாரம் இருக்கும். நடப்பாண்டு ஆயுதபூஜைக்கு முன்பு பெரிய கடைகளில் வெறும் 10 சதவீதம் வியாபாரம் தான் நடக்கிறது.சிறிய ஜவுளிக்கடைகளில் 5 சதவீத வியாபாரம் நடக்கிறது. அதனால் சிறிய ஜவுளிக்கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜவுளிகள் வாங்கி குவிக்கலாமா அல்லது இருப்பில் உள்ள ஜவுளிகளையே வியாபாரம் செய்யலாமா என்று யோசித்து வருகிறோம்.எப்படி இருந்தாலும் நடப்பாண்டு தீபாவளி வியாபாரம் களைகட்டாது என்பது சிறிய வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Corona ,Diwali Business , Corona, textile
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...