×

ஊரடங்கை தளர்த்தியும் விற்பனை இல்லை: பொரி வியாபாரம் போயே போச்சு...

உடுமலை: ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை காலம் துவங்கிவிட்டால் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் 9 நாட்களின்போதும் வீடுகள், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது அனைத்து தொழில் நிறுவங்களிலும் பூக்கள், பழங்கள், வாழை, கரும்பு, மஞ்சள், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றை வைத்து தொழில் சிறப்பதற்காக வழிபாடு நடத்துவதுண்டு. சிறிய ஒர்க்ஷாப் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டும்.

தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நவராத்திரி விழா தசரா பண்டிகையாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் நவராத்திரி பண்டிகையின்போது ஒவ்வொரு நாளும் ஒருவித பிரசாதங்களை மும்பெரும் தேவியருக்கு படைத்து அதனை வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி மகிழ்வர். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து ஆயுத பூஜையின்போதுதான் அவல், பொரி, கடலை வியாபாரிகளுக்கு இடைவிடாது வேலை கிடைக்கும். அத்துடன் கூடுதல் வருமானமும் கிடைக்கும். இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கோயில்கள், வீடுகளில் கொலு வைப்பது குறைந்துள்ளது. அதேபோல், வெளிமாநிலங்களுக்கும் சரிவர போக்குவரத்து இல்லாததால் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பகுதியில் பொரி தயாரிக்கும் ஆலைகளில் இந்தாண்டு விற்பனை மந்தமாக உள்ளது. விலையை குறைத்து கொடுத்தாலும் பொரி வாங்க ஆளில்லாதால் பொரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமரலிங்கத்தில் பொரி ஆலை நடத்தி வரும் ராஜகோபால் சாமி கூறுகையில், ‘`ஆண்டுதோறும் நவராத்திரியை தொடர்ந்து வரும் ஆயுத பூஜையின்போது நடைபெறும் பொரி வியாபாரம் தான் எங்களுக்கு தீபாவளி போனஸ். ஒவ்வொரு ஆண்டும் 40 டன் வரை பொரி உற்பத்தி செய்வோம். திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வடமாநிலங்களுக்கும் பொரியை ஏற்றுமதி செய்வோம். கடந்த ஆண்டு பொரி மூட்டை ஒன்று (60 பக்கா) ரூ.400க்கு விற்பனை செய்தோம். இந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர் வராததால் 10 டன் வரைதான் பொரி உற்பத்தி செய்ய முடிந்தது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு மூட்டைக்கு 40 ரூபாய் வரை விலையை குறைத்தும் வாங்குவதற்கு ஆள் இல்லை. கொரோனா பீதி காரணமாக வடமாநிலத்திற்கு செல்ல வேண்டிய லோடு இந்த முறை செல்லவில்லை. பொரி தயாரிப்பதற்கான நெல், விறகு விலை ஏறியதோடு, தொழிலாளர்களுக்கான கூலியை கணக்கிடுகையில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. பல தொழில் நிறுவனங்கள் பூட்டப்பட்டதால் ஆயுதபூஜை கொண்டாடுவது சந்தேகம்தான். பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ததால் பொரி ஆர்டரும் குறைந்துவிட்டது. இத்தொழிலை நம்பி சிறு, சிறு வியாபாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கொரோனா தொற்றால் உற்பத்தியும், விற்பனையும் குறைந்து விட்டது’ என்றார்.

ஆயுத பூஜை கொண்டாட அச்சம்

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், கோயில்கள், வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். பிரசாதம் விநியோகிக்க தடை. பூஜை பொருட்களை பெறுவதற்கு தடை நீடிப்பு போன்றவற்றால் இந்த முறை ஆயுத பூஜை களைகட்டுவது சந்தேகமே. பொரி வியாபாரம் மட்டுமின்றி ஆயுத பூஜையையொட்டி நடைபெறும் பூக்கள், கரும்பு, பழம், தேங்காய் போன்றவற்றின் விற்பனையும் டல் அடிக்கிறது. தொழில் நிறுவனங்கள் இந்த முறை கொரோனா விதிமுறைக்குட்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் பூஜை ெசய்ய திட்டமிட்டுள்ளன. செலவினை கட்டுப்படுத்துவதற்காக பூஜையை சிக்கனமாக நடத்த உள்ளதால் சிறு, குறு வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : business ,Pori , Udumalai, Pori, business
× RELATED வாரச்சந்தையில் கூவி கூவி விற்பனை;...