×

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் நுழைந்து 10 யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் நுழைந்த 10 யானைகள், 5 ஏக்கரில் பயிரிட்ட ராகி மற்றும் ரோஜா தோட்டத்தை நாசப்படுத்தின. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அடிக்கடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அருகே ஜார்கல்லட்டி கிராமத்திற்குள் 10க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்தன. அங்குள்ள விவசாயிகள் சிக்கண்ணா, அனுமந்தப்பா ஆகியோரது நிலங்களில் பயிரிட்டிருந்த ராகி மற்றும் ரோஜா தோட்டத்தை நாசப்படுத்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன.

நேற்று காலை, ராகி அறுவடை செய்ய வந்த சிக்கண்ணா, ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விட வந்த அனுமந்தப்பா, தங்களது விளைநிலங்கள் யானைகளால் சேதப்படுத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சேதமான பயிர்களை பார்வையிட்டு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அடிக்கடி கிராமத்திற்குள் நுழையும் யானைகளால் பயிர்கள் சேதமாகி வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : village ,Dhenkanikottai , Dhenkanikottai, elephants
× RELATED வால்பாறை அருகே வனத்துறை முகாமை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்