×

முதுகுளத்தூர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: அகழாய்வு செய்ய கிராம மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே கண்மாய் பணிக்காக தோண்டும்போது முதுமக்கள் தாழி, மனித எலும்புகள், ஓடுகள் தென்பட்டதால், தொல்லியியல் துறையினர் அகழாய்வு செய்ய கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் கண்மாயில் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. நேற்று கண்மாயினை ஜேசிபி மூலம் 7 அடிக்கு மேல் தோண்டினர். அப்போது முதுமக்கள் தாழி, அதில் மனித எலும்பு துண்டுகள், மண்பாண்ட ஓடுகள் போன்றவை தென்பட்டன. இதையடுத்து கமுதி வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இப்பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு தோண்டும்போது கலைநயமிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், அம்மிக்கல், முதுமக்கள் தாழி, எலும்புகூடுகள் தென்பட்டன. இதுகுறித்து அப்போது தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த ஆய்வு பணி கிடப்பில் போடப்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த ஜூலை மாதம் மேலக்கொடுமலூர் விவசாய நிலத்தில் சுமார் 7 அடி ஆழத்திற்கு கீழ் மீண்டும் பண்டைய கால பொருட்கள் தென்பட்டது. இதனால் அகழாய்வு செய்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், அழகன்குளம், தொண்டி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கிடைத்த தொன்மையான பொருட்கள் போன்று கீழக்கொடுமலூர், மேலக்கொடுமலூரிலும் அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும்.இங்குள்ள பழமையான சிவன்கோயில், முருகன் கோயில்களில் ஆய்வு செய்தால், இந்த ஊர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் பல சங்ககால பொருட்கள், அதன் மூலம் அரிய தகவல்களை பெற வாய்ப்புள்ளது. எனவே அரசு தொல்லியியல் துறை சார்பாக அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16ம் நூற்றாண்டு சிலைகள் கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்கம்மாள்புரம், பழமுதிர்பண்ணை, அய்யனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால கற்சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கல்லூரி வரலாற்று பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிலைகள் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தங்கம்மாள்புரத்தை சேர்ந்த இலைமுருகன் கூறுகையில், ‘‘இந்த சிலைகள் அனைத்தும் பாண்டிய மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். 1984ம் ஆண்டு வருசநாடு மூலவைகையாற்றில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் இந்த சிலைகள் அடித்து வரப்பட்டன. இதை பொதுமக்கள் எடுத்து வந்து வழிபட்டு வருகிறோம். தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகக்கூடும்’’ என்றார்.

Tags : hut ,Mudukulathur , Excavation
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...