×

பிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் டாக்டர் பலி.. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு அறிவிப்பு!!

பிரேசில் : பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட டாக்டர் உயிரிழந்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இங்கிலாந்து சார்பில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி முன்னணியில் இருக்கிறது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2ம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துவிட்டதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த 28 வயதான டாக்டர் ஜோனோ  ஃபீடோசா என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. பிரேசிலில் தடுப்பூசி சோதனை ஒருங்கிணைப்பு பணிகளை ஸா பாலோ பல்கலைக்கழகம் கவனித்து வருகிறது. தடுப்பூசி போட்டபின் இறந்த நபர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



Tags : Dr. ,corona vaccine test ,vaccination test ,Brazil ,volunteer ,government , Brazil, Corona, Vaccine, Testing, Volunteer, Government of Brazil, Notice
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...