×

தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களின் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை தடுக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பொறியியல்  கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை  நிறுத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள், 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள், 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. ஆனால், 65 சதவீத இடங்களுக்கும் அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும்படி, தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்ப்பந்திப்பதாக கூறி, கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரி தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் இடங்களை ஒதுக்கும்படி, தனியார் கல்லூரிகளை நிர்ப்பந்திப்பதில்லை. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, தனியார் கல்லூரிகள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும்பட்சத்தில் அந்த இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனியார் கல்லூரிகள், தாமாக முன் வந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க எந்த தடையும் இல்லாததால், கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை  நிறுத்தும்படி கோர முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Tags : engineering colleges ,Chennai High Court ,government , Private engineering colleges cannot be barred from handing over their administrative allotted seats to the government: Chennai High Court order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...