×

மருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா?

சென்னை: மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் கனவு இந்தாண்டு நிறைவேறுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 35 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர், ஒப்புதல் வழங்காமல் உள்ளார். நாடு முழுவதும் இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டதால் விரைவில் மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர், நேற்று முன்தினம் சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது, தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளித்தால் ஏற்படும் சாதக, பாதக நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே தமிழக அரசு மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் கவர்னர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. கவர்னர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா னால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுமா என்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால், இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்வார்கள் என்றும் கவர்னருக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பும் பட்சத்தில், மீண்டும் தமிழக அரசு கவர்னருக்கு அதே மசோதாவை அனுப்பி வைத்தால் கண்டிப்பாக கையெழுத்து போட்டு ஆக வேண்டும். ஆனாலும் கவர்னர் கையெழுத்து போடாமல் 35 நாட்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தலையீடும் இதில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்காமலேயே தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடக்க வேண்டும் என்பதை கவர்னர் எதிர்பார்க்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மசோதாவுக்கு கவர்னர் அனுமதி அளித்தால் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும். இதனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுவது தமிழக கவர்னர் கையில்தான் உள்ளது.

Tags : Governor ,consultation ,experts ,government school students , 7.5% quota for admission to medical college: Governor's consultation with legal experts: Will the dream of government school students come true?
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...