தமிழகத்தில் 4 ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு: சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள கந்தசாமி டிஜிபியாகவும், தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள ஷகில் அக்தர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள ராஜேஷ்தாஸ் சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும், தமிழக கேடரில் புதுடெல்லியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் பிரிஜ்கிஷோர் ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, அதே பதவியில் நீடிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதில், தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவில் இதுவரை டிஜிபி அந்தஸ்தில் யாரும் நியமிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த விஜயகுமார் பதவி உயர்வு பெற்றபோது, முதல் முறையாக சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது. பின்னர் சில நாட்களில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறப்பு சட்டம் ஒழுங்கு பதவி வழக்கம்போல கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு தரம் குறைக்கப்பட்டது. தற்போது தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள ஏடிஜிபி ராஜேஷ்தாசுக்காக மீண்டும் சிறப்பு டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் கட்டுப்பாட்டில் வரமாட்டார்கள். நேரடியாக உள்துறைச் செயலாளரின் கட்டுப்பாட்டில் வருவார்கள். இதனால், டிஜிபி அந்தஸ்தில் தீயணைப்புத்துறை, சிறைத்துறை, போலீஸ் பயிற்சி போன்ற துறைகளில்தான் டிஜிபியாக இருப்பவர்களை நியமிப்பார்கள். ஆனால் தற்போது எல்லா பிரிவிலும் டிஜிபி அந்தஸ்தில் பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள திரிபாதியின் அதிகாரம் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதால், இனி அவர் முழுமையாக சட்டம் ஒழுங்கு பிரிவை கவனிப்பார். இவர், திரிபாதியின் கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்டாலும், அரசுடன் நேரடியாக ஆலோசனைகளை கேட்டு செயல்படுவார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ்தாசின் நியமனம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>