×

தி.நகர் மொத்த நகை விற்பனை கடையின் பூட்டை உடைத்து 4 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை: 15 கிலோ வெள்ளி கட்டிகளும் திருட்டு

மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: தி.நகரில் மொத்த நகை விற்பனை கடையின் பூட்டை உடைத்து 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் 15 கிலோ வெள்ளி கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 4 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சிசிடிவியில் பதிவான மர்ம நபரை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் மூசா தெருவில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் முதல் தளத்தில் ‘உத்தம் ஜூவல்லரி’ என்ற பெயரில் ராஜேந்திர பாபு என்பவர் தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மொத்தம் மற்றும் சில்லறை கடை என்பதால் எப்போதும் நகை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் கடையில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராஜேந்திரபாபு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.நேற்று காலை 10 மணிக்கு கடையை திறக்க ராஜேந்திரபாபு வந்த போது, நகைக்கடையின் கிரில் கேட் மற்றும் கடையின் பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அலறி அடித்து கொண்டு கடைக்குள் சென்று பார்த்த போது 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ தங்கம் கலந்த வைர நகைகள், அரை கிலோ தங்க கட்டி மற்றும் 15 கிலோ வெள்ளி நகை மற்றும் கட்டிகள் என மொத்தம் 20 கிலோ மாயமாகி இருந்தது. இதன் பதிப்பு ₹4 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் 2 கிலோவுக்கு தங்கம் கலந்த வைர நகைகள் கொள்ளைபோயுள்ளன. இதன் மதிப்பு மட்டுமே ₹2 ேகாடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சில நகைகள் கடை முழுவதும் சிதறி கிடந்தது.  இதுகுறித்து கடையின் உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கடை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி மற்றும் மூசா தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பெற்று போலீசார் பார்த்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு சர்வ சாதாரணமாக வந்து 20 கிலோ மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளியை அள்ளிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

உடனே மர்ம நபரின் புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனை பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் பல்வேறு கோணங்களில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.மேலும், கடையில் பணியாற்றிய முன்னாள் மற்றும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களிடம் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : diamond jewelery , 4 crore gold, diamond jewelery looted: 15 kg silver nuggets stolen
× RELATED திருப்பதியில் தங்க, வைர நகைகளால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம்