×

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. . இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் சென்ற ஆண்டை விட உயர்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு இன்றைய தேதியில் கடந்த ஆண்டில் உள்ள கொள்ளளவை விட அதிகமாக உள்ளது. வீராணம் நீர் தேக்கத்தின் கொள்ளளவு மட்டும் குறைவாக உள்ளது.  வடகிழக்கு பருவமழை, இந்த மாத இறுதியில் பெய்யத்தொடங்கும்.

பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்களில் 7,39,450 பேரை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4,680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோர அபாய குறைப்பு திட்டத்தின் மூலமாக பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கை உள்பட பல திட்டங்களுக்காக ரூ.1560.19 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் 1070 மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் 1077 மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

Tags : monsoon ,Tamil Nadu ,Minister , Northeast monsoon will begin in Tamil Nadu by the end of this month: Minister
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...