×

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள், வணிக வளாகம் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி  கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து  கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 9 மணி வரை திறக்கலாம் என்பதை இன்று முதல் இரவு 10 மணி வரை  திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. எதிர்வரும் பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டும்,  பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இன்று (22ம் தேதி) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

தமிழக அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும். முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : shops ,shopping malls ,announcement ,Edappadi ,Chief Minister , Permission to open shops and shopping malls till 10 pm following Government guidelines: Chief Minister Edappadi's announcement
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!