×

கஞ்சா கடத்திய காவலர் டிஸ்மிஸ்

 தண்டையார்பேட்டை: சென்னை நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாநகர கமிஷனருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று தலைமை செயலகம் அருகில் கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத்(28), தலைமை செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி ரமேஷ்(40), ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(26) மற்றும் ஒருவர் என தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத் சென்னை புரசைவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கஞ்சா வியாபாரி ரமேஷிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சென்னை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், தான் போலீஸ் என்பதால் யாரும் தன்னை மடக்கி சோதனை செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் சென்னை மாநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத்தை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags : cannabis smuggler , Police dismiss cannabis smuggler
× RELATED கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு