×

வெள்ளத்தின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க வால்டாக்ஸ் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஈ.வெ.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதியை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்துள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக்கை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் தயாநிதி மாறன் எம்பி, நிருபர்களிடம் கூறியதாவது;
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை மற்றும் பேசின்பிரிட்ஜ் சாலை ஆகியவற்றை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் இருபுறமும் சுமார் 50 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கால்வாயில், மழைநீர் வடிகால் பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது. இதனால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து அங்கு வசித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு மழையின்போது அமைக்கப்பட்ட மழைநீர் கண்காணிப்பு குழுவும் தனது அறிக்கையில் பழைய கால்வாயை இடித்துவிட்டு புதிய கால்வாய் கட்ட பரிந்துரை செய்துள்ளது. எனவே அங்குள்ள பகுதி மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீர் வடிகால்வாய் பணி அமைக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். சட்டமன்ற கூட்டத்தொடரில் யானைக்கவுனி மேம்பாலம் குறித்து துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இந்த ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பணியும் விரைவில் முடியும் என்றும் நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் தெரிவித்தார். இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கூறினார்.

Tags : Dayanidhi Maran ,Valdox Road ,floods , Rainwater drainage should be constructed on Valdox Road to prevent flood damage: Dayanidhi Maran MP
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...