தரமான ரேஷன் அரிசி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தரமான ரேஷன் அரிசி வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருளர் மற்றும் பழங்குடியி மக்கள். இவர்கள், கொரோனாவால் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அரசு வழங்கும் ரேஷன் பொருட்களையே நம்பியுள்ளனர். ஆனால், அரசு வழங்கும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடையில் தரமான ரேஷன் அரிசி வழங்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மதியம், பட்டாங்குளம் கிராமம் அருகே உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் திரண்டனர். பின்னர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>