×

திருப்போரூர் ஒன்றியத்தில் அவலம் குப்பை குடோனாக மாறிவரும் புதுப்பாக்கம் ஈசா ஏரி: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

திருப்போரூர்: ஈசா ஏரியில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள்  கொட்டப்படுவதால், குப்பை குடோனாக மாறி வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. திருப்போரூர் ஒன்றியம்  புதுப்பாக்கம் ஊராட்சி,  வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. சிறுசேரி மென்பொருள் தொழில் நுட்ப பூங்காவை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் உருவாகியுள்ளன. இதையொட்டி இங்கு, தற்போது 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொழில் வரி, சொத்து வரி, கட்டிட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி ஆகியவற்றின் மூலம் கணிசமான வருவாய் புதுப்பாக்கம் ஊராட்சிக்கு வருகிறது.  புதுப்பாக்கம் ஊராட்சி அமைக்கப்பட்டபோது, 3 ஆயிரம் பேர் மட்டுமே வசித்தனர்.

இதனால், குப்பைகளை அகற்றுதல், அவற்றை மறு சுழற்சி செய்தல் ஆகியவற்றில் பெரிதாக ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. தற்போது மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய ஊழியர்கள் இல்லாததாலும், குப்பைகளை உரமாக்கும் திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், புதுப்பாக்கம் ஊராட்சியில் அகற்றப்படும் குப்பை, கண்ட இடங்களில் எரிக்கப்படுகிறது.

புதுப்பாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல், புதுப்பாக்கத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் ஈசா ஏரியில் கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் புகை மற்றும் கடும் துர்நாற்றம் அதிகளவில் வெளியேறுகின்றது. புதுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தரின் அவென்யூ, லட்சுமி அவென்யூ, ஜஸ்ராஜ் நகர், சாய் கேர் இந்தியா காலனி, நல்ல தண்ணீர் குளம், கன்னியம்மன் கோயில் தெரு, பெரியார் நகர் உள்பட பல்வேறு குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், இருமல், தோல் நோய் ஆகியவற்றால்  கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவை புதுப்பாக்கம் ஈசா ஏரியை பாதுகாக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊராட்சியில் முறையாக செயல்படுத்தி, வீடு தோறும் குப்பைகளை பெற்று தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும் என அங்கு வசிக்கும் பல்வேறு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர், கலெக்டர் உள்பட பலருக்கு மனுக்கள் அனுப்பினர். ஆனால், இதுவரை சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, ஈசா ஏரியின் நிலத்தடி நீர் பாதிப்படைவதற்குள் அங்கு குப்பை கொட்டுவதை தடை செய்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

* மர்ம காய்ச்சல் அபாயம்
தற்போது மழைகாலம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதில், ஈசா ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் மழைநீரில் நனைந்து, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட ஏரியில் உள்ள குப்பையை அகற்றி, சுகாதாரத்தை காக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Isa Lake , Isa Lake: The authorities who did not take action
× RELATED பொதுப்பணித் துறை அலட்சியத்தால்...