×

ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாள் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த மலையப்ப சுவாமி: இன்று காலை சூரிய பிரபை வாகனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்றிரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி இரவு தொடங்கியது. 5ம் நாளான நேற்று முன்தினம் காலை மலையப்ப சுவாமி, நாச்சியார் கோலத்தில் (மோகினி அலங்காரம்) அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நடந்தது.

கல்யாண மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கஜேந்திர மோட்சத்தில் யானை காப்பாற்றிய விரதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பாற்றுவதற்காக மலையப்ப சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
முன்னதாக சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

* 150 கிலோ பூக்களுடன் புஷ்ப பல்லக்கு
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 150 கிலோ மல்லி, கனகாம்பரம், முல்லை, தாமரை மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பல்லக்கு 750 கிலோ எடை, 15 அடி உயரம், 14 அடி அகலம் கொண்டது. இதற்கு சேலத்தை சேர்ந்தவர்கள் மலர் வடிவம் கொடுத்தனர்.

* 17,256 பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 17,256 பக்தர்கள் ரூ.300 கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். 3,873 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில், ரூ.1.52 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.

* ஸ்ரீகோதண்டராமர் அலங்காரம்
த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த தனது பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்தரின் பக்தி பாவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் என அனைவரும் தானே என்னும் விதமாக ராமர் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தில் கருடசேவைக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் அனுமந்த வாகனத்திற்கும் அளிக்கப்பட்டது.


Tags : Malayappa Swami ,Ezhumalayan Temple Pramorsavam ,Surya Prabha , On the 6th day of the Ezhumalayan Temple Pramorsavam, Malayappa Swami awoke in an elephant vehicle and received blessings.
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத...