×

சிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 85 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷிவம் மாவி நீக்கப்பட்டு டாம் பான்டன், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். பெங்களூர் அணியில் ஷாபாஸ் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.

ஷுப்மான் கில், திரிபாதி இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். சிராஜ் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் திரிபாதி (1 ரன்) விக்கெட் கீப்பர் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ராணா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். ஷுப்மான் கில் 1 ரன் எடுத்து சைனி பந்துவீச்சில் மோரிஸ் வசம் பிடிபட, கேகேஆர் அணி 2.2 ஓவரில் 3 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பரிதாபமாக விழித்தது. பான்டன் 10 ரன் எடுத்து (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) சிராஜ் வேகத்தில் டி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார்.

கொல்கத்தா 3.3 ஓவரில் 14 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து பரிதவிக்க, தினேஷ் கார்த்திக் - கேப்டன் மோர்கன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான இருந்ததால் இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினர். சிராஜ் அடுத்தடுத்து 2 மெய்டன் ஓவர்களை வீசி அசத்தினார். ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் 2 மெய்டன் வீசிய முதல் வீரர் என்ற சாதனை அவர் வசமானது. 14 பந்துகளை சந்தித்த கார்த்திக் 4 ரன் மட்டுமே எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் 17 பந்தில் 4 ரன் எடுத்து நடையை கட்டினார்.

கடுமையாகப் போராடிய மோர்கன் 30 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சுந்தர் பந்துவீச்சில் குர்கீரத் சிங் வசம் பிடிபட்டார். குல்தீப் யாதவ் - பெர்குசன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 27 ரன் சேர்த்தனர். இந்த இன்னிங்சில் கேகேஆர் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. குல்தீப் 12 ரன் எடுத்து (19 பந்து, 1 பவுண்டரி) ரன் அவுட்டானார். பெர்குசன் 19 ரன்னுடன் (16 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி ஆல் அவுட்டாகாமல் எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்த இன்னிங்சில் 4 மெய்டன்கள் வீசப்பட்டதும் புதிய சாதனையாக அமைந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ் 4 ஓவரில் 2 மெய்டன் உட்பட 8 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். சாஹல் 2, சைனி, சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 85 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் களமிறங்கியது.

Tags : Siraj ,team ,RCB ,KKR , Siraj fell short of the KKR RCB team's 85-run target
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...