×

ஊரடங்கில் மேலும் தளர்வு அளிக்க முடிவு: பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பா? முதல்வர் எடப்பாடி 28ம் தேதி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி வருகிற 28ம் தேதி  கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த  மார்ச் 24ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்கள் வசதிக்காக  பல்வேறு தளர்வுகள் அடிப்படையில், கடைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மால்கள், கோயில்கள்  திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஜூன் முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் தியேட்டர்கள், நீச்சல் குளங்களும்  திறக்கப்படாமல் உள்ளது.

தற்போது பண்டிகை காலம் என்பதால், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம்  இறுதியிலும், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள்  மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி வருகிற 28ம் தேதி (புதன்) அனைத்து  மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அப்போது, நவம்பர் 1ம்  தேதியில் இருந்து தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்க உள்ளதாகவும், அப்படி திறந்தால், 50 சதவீதம் மக்கள் அமரும் வகையில் மத்திய அரசு  தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.

காரணம், நவம்பரில் தீபாவளி பண்டிகை வருகிறது. அப்போது நிறைய புது படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தியேட்டர்களை திறக்க  அனுமதி அளிக்க தமிழக முடிவு செய்துள்ளது. அதேபோன்று பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தனியார் பள்ளிகள்,  ஆன்லைன் மூலம் கடந்த 5 மாதங்களாக வகுப்புகளை நடத்தி வருகிறது. அதேநேரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை  வகுப்புகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக அரசு தேர்வு எழுதும்  10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மார்ச், ஏப்ரல் மாத தேர்வுக்கு தயாராக வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளி கூடங்களை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு  விட்டது. ஆந்திராவில் நவம்பர் மாதம் முதல் திறக்கப்பட உள்ளது. அதனால் தமிழகத்திலும் வருகிற நவம்பரில் பள்ளிகளை திறப்பது குறித்து முக்கிய  முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி பள்ளிகள் திறந்தாலும், ஒரு சில மாதங்கள் சுழற்சி முறையிலேயே வகுப்புகள் நடத்த  அனுமதிக்க வாய்ப்புள்ளது.

Tags : theaters ,schools ,Edappadi , Decision to further relax curfew: Will schools and theaters open in November? Chief Minister Edappadi consulted on the 28th
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...