×

விளாத்திகுளத்தில் தடை மீறி கட்சிக்கொடி ஏற்ற வந்த அதிமுகவினர் மீது போலீசார் தடியடி: விளாத்திகுளத்தில் பரபரப்பு

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் திமுகவினர் கட்சிக் கொடி ஏற்ற இருந்த இடத்தில் தடை மீறி கொடி ஏற்ற அதிமுகவினர் வந்ததால் கடும் போட்டி  ஏற்பட்டது. இதில் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். தடியடியை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்கள் தாக்கியதில் டிஎஸ்பி காயமடைந்தார்.  விளாத்திகுளம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சில நாட்களுக்கு முன்பு  சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் உள்ள திமுக  கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியேற்ற திமுகவினர் அனுமதி பெற்றனர்.  

அதே இடத்தில் அதே நேரத்தில் கட்சிக் கொடியேற்ற அதிமுகவினரும் நேற்று அனுமதி கேட்டனர். பிரச்னை ஏற்படும் என்று போலீசார் அனுமதி  வழங்கவில்லை.  இருப்பினும், தடையை மீறி கொடியேற்ற அதிமுகவினர் ஆயத்தமாகினர். அனுமதி பெற்றிருந்த திமுகவினரும் நேற்று மதியம் 2  மணி முதல் பஸ் நிலையம் முன்பு திரண்டனர்‌. இதற்காக கட்சிக் கொடிகளை நட்டு வந்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர், தங்களது கட்சிக்  கொடிகளை கொண்டு வந்து நடும் பணியில் ஈடுபட்டனர். இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு போலீசார் கயிறு கட்டி  தடுத்து நிறுத்தினர்.  தகவலறிந்து  வந்த சின்னப்பன் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் ேபசியபின் அவர்களும் கட்சிக் கொடிகளை நட்டனர். இதுதொடர்பாக  இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதையடுத்து ஏடிஎஸ்பி கோபி தலைமையில், டிஎஸ்பிக்கள் சங்கர், கலைக்கதிரவன், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த அதிமுகவினரை அப்புறப்படுத்தினர்.  பின்னர் மாலை 5 மணிக்கு வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுக கொடியேற்றப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலையில்  திமுகவினர் திரளாக பங்கேற்றனர். அப்போது அதிமுகவினர் கட்சிக் கொடியேற்ற சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் சூரங்குடி சாலையில் இருந்து  பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து போலீசார் தாங்கள் வைத்திருந்த தடுப்பு வளையத்தால் அதிமுகவினரை தடுத்தனர்.  இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனே அதிமுகவினர் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த அதிமுகவினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்  கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் போலீசார் மேலும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் ஆவேசமடைந்த சின்னப்பன் எம்.எல்.ஏ., போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ் நிலையம் அருகே அதிமுகவினருடன் சாலை  மறியலில் ஈடுபட்டார். அவர்களை ஏடிஎஸ்பி கோபி சமரசப்படுத்தினர். இதையடுத்து  சின்னப்பன் எம்.எல்.ஏ., பஸ் நிலையம் முன்புள்ள அதிமுக  கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியேற்றினார்.


Tags : AIADMK ,Vilathikulam , Police beat up AIADMK activists who hoisted party flags in Vilathikulam: Vilathikulam riots
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...