×

ராணுவம்-போலீஸ் பயங்கர மோதல் பாகிஸ்தானில் உள்நாட்டு போர்? சிந்து மாகாணத்தில் கடும் பதற்றம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸ் ஐஜி கடத்தப்பட்டதாக பரவிய புரளியால் ராணுவத்திற்கும், போலீசாருக்கும் இடையே  கடும் மோதல் ஏற்பட்டு, உள்நாட்டு போர் சூழல் உருவாகி உள்ளது.  பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்ந்து  நாடு முழுவதும் போராட்டங்களை தொடங்கி உள்ளன. கராச்சியில் நடந்த பிரமாண்ட பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பேரணி  முடிந்ததும், இதில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் சப்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கராச்சியில் அவர்  தங்கியிருந்த ஓட்டல் கதவை உடைத்து சப்தார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கைது விவகாரத்தில், சிந்து மாகாண போலீசார் முதலில் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. சப்தாரை கைது செய்வதில்  ராணுவம் தீவிரமாக இருந்த நிலையில், சிந்து மாகாண போலீஸ் ஐஜி எந்த முடிவுகள் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால், போலீசை பணிய வைக்க,  ஐஜியை ராணுவம் கடத்தியதாகவும் அதன்பிறகு தான் கராச்சி போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஓட்டல் கதவை உடைத்து சப்தாரை கைது  செய்ததாகவும் கூறப்படுகிறது. ராணுவத்தால் போலீஸ் ஐஜி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், சிந்து  மாகாணத்தில் பல பகுதிகளில் துணை ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

இதன் காரணமாக உள்நாட்டு போர் மூளும் சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ராணுவம் தரப்பிலோ அரசு தரப்பிலோ இது பற்றிய  எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய சூழல் குறித்து உடனடியாக  விசாரணை நடத்தி அறிக்கை தர கராச்சி ராணுவ கமாண்டருக்கு ராணுவ தளபதி பஜ்வா உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்  மற்ற மாகாணங்களிலும் பரவும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தான் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

10 போலீசார் படுகொலை?
சிந்து மாகாணத்தில் பல இடங்களில் ராணுவம் - ேபாலீஸ் இடையே நடந்த மோதலில், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, ஆங்காங்கே  தீ வைக்கப்பட்டன. இந்த மோதலில் 10 கராச்சி போலீசாசை ராணுவத்தினர் கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற சில  புகைப்படங்கள் வெளியாகின.

விடுமுறை போராட்டம்
மோதல் சம்பவத்தை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சிந்து மாகாண ஐஜி விடுப்பு போராட்டத்தை அறிவித்தார். தேச நலன்  கருதி விடுப்பு எடுப்பதாக அறிவித்த அவர், மற்ற போலீஸ் அதிகாரிகளும் விடுப்புக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தினார். இதனால் சிந்து மாகாண  போலீசார் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்த தயாராயினர். இதற்கிடையே, ராணுவ தளபதி பஜ்வா விசாரணைக்கு உத்தரவிட்டதால், இந்த  விடுப்பு போராட்டத்தை 10 நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறு ஐஜி டிவிட்டர் மூலமாக நேற்று கேட்டுக் கொண்டார்.



Tags : Army-Police Terror Clash Civil War ,Pakistan ,province ,Sindh , Army-Police Terror Clash Civil War in Pakistan? Tensions in Sindh province
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...