பாக். ராணுவம்-சிந்து போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை : ‘உள்நாட்டு போர்’ என்ற தகவலால் பதற்றம்

இஸ்லாமாபாத், சிந்து காவல் துறை கடத்தப்பட்டதாக வெளியான தகவலால், பாகிஸ்தான் ராணுவம் - சிந்து போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால், பாகிஸ்தானில் ‘உள்நாட்டு போர்’ என்று செய்தி வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி பிரதமர் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக  கராச்சி நகரில் பிரம்மாண்ட பேரணி நடத்தின.

இதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றார். இவர், இம்ரான் கானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் பேசும்போது, ‘பாகிஸ்தானில் மீண்டும் நவாஸ் ஷெரீபை பிரதமர் ஆக்குவோம். இம்ரான் கானை ஜெயிலுக்கு அனுப்புவோம்’ என்று பேசினார். இந்நிலையில் ஓட்டலில் தங்கியிருந்த மரியம் நவாசின் கணவர் சப்தார் அவானை போலீசார் கைது செய்தனர். இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் ‘உள்நாட்டுப் போர்’ ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, சிந்து காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முகமது சப்தாரை கைது செய்வதற்காக, சிந்து காவல்துறைத் தலைவரை  பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் கடத்திச் சென்றனர்’ என்று குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பஜ்வா (ராணுவ தலைமைத் தளபதி) முழு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், தி இன்டர்நேஷனல் ஹெரால்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட டுவிட்டரில், ‘சிந்து போலீசுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது கராச்சி போலீஸ் அதிகாரிகள் சிலர் இறந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு உள்நாட்டுப் போர் நடந்துள்ளது. அங்கு நிலைமை பதற்றத்தில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாள் ‘டான்’ மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பான செய்தி எதுவும் வெளியிடவில்லை.

Related Stories: