×

ராஜபாளையம் மலையடிவாரத்தில் சாலை பணி பெயரில் மணல் கடத்தல் நடக்கிறதா? கலெக்டர் ஆய்வு

ராஜபாளையம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலியாக ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சாலை பணி பெயரில் மணல் கடத்தல் நடக்கிறதா என்பது குறித்து கலெக்டர், வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் அய்யனார் கோயில் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய அம்மா தோப்பு மூலக்காடு, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் 1914ம் ஆண்டு முதல் மாட்டு வண்டிகள் சென்று வரக்கூடிய அளவிற்கு மண்பாதை இருந்துள்ளது.

இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையக்கூடிய மா, தென்னை போன்ற பயிர்களை நகருக்கு எடுத்து வந்தனர். தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் நபார்டு வங்கி மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் 7 பாலங்கள், சாலை அமைக்கும் பணிகள் 3 கிமீ தூரம் நடந்துள்ளது.

இதற்கிடையே, இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல், வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணி நடப்பதாகவும், எனவே சாலை பணியை நிறுத்த வேண்டுமென வத்திராயிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் கண்ணன், வனத்துறை கூடுதல் வன பாதுகாவலர் யோகேஷ், ஐஎப்எஸ் அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட முதன்மை வன அலுவலர் முகமது ஷபாப் ஆகியோர் இப்பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் கண்ணன் கூறுகையில், ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் ஆய்வு செய்துள்ளோம். இதன் அறிக்கையை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்போம். அதன்பின் இப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடர்வது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிக்கும்’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரராஜா கூறுகையில், ‘இப்பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வண்டிப்பாதை இருந்தது. அதை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். தற்போது ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் பாலங்களுடன் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணியை வனத்துறை அனுமதி பெறவில்லை எனக்கூறி நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி ஒரு சிலர் தொடர்ந்த வழக்கின் காரணமாக சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : foothills ,Collector inspection ,Rajapalayam , Rajapalayam, National Green Tribunal
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து