×

கரந்தை பூக்குளம் கொள்முதல் நிலைய வளாகத்தில் போதிய பாதுகாப்பின்றி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது

தஞ்சை: கரந்தை பூக்குளம் கொள்முதல் நிலையத்தின் வெளியே போதிய பாதுகாப்பின்றி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது. மேலும் தரமற்ற சாக்குகளால் நெல்மணிகள் சேதமாகி வருகிறது. தஞ்சை கரந்தை பூக்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் கரந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட 5,000 ஏக்கர் குறுவை நெல்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். சாக்கு, சணல் தட்டுப்பாட்டால் தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்தின் பின்புறமுள்ள திறந்தவெளி பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் 2,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாற்றுகள் முளைத்தது. இதனால் கொள்முதல் அலுவலர்கள், மீதமுள்ள நெல் மூட்டைகளை நேற்று உலர்த்தினர். 4,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளில், 2,000 நெல் மூட்டை சாக்குகள் அனைத்தும் தரமற்ற சாக்குகளாக உள்ளது. இதனால் மாற்று சாக்குகளில் நெல்களை மாற்றும் பணியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சாக்குகள் தட்டுப்பாட்டால் நேற்று நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யவில்லை. எனவே விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாக காத்திருக்கிறோம். ஆனால் குறைவாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்துவிட்டது. ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்த தொகை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு கொள்முதல் நிலையத்துக்கும் கூடுதல் பணியாளர்களை நியமித்து தேங்கிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாற்றுகள் முளைத்து விட்டன. மழையில் நனைந்த நெல் மூட்டை சாக்குகளை மாற்றும் போது கிழிந்து விடுகிறது, இதனால் தார் படுதாவில் நெல்லை கொட்டி வைத்துள்ளோம். கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்வதற்காக வந்தபோது சாக்குகள் பற்றாக்குறையால் நெல் கொள்முதல் செய்யவில்லை. பெரும்பாலான நெல் மூட்டைகள் நனைந்துள்ளது என்றோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மீதமுள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தாவிட்டால் அதுவின் சேதமாகி விடும் என்றார்.

Tags : premises ,Karanthai Pookkulam Procurement Station , Rain, paddy bundles
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...