×

மழைக்காலம் என்பதால் வெங்காயம் வரத்து குறைவு: நியாயவிலை கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை...அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: வெங்காயத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட  மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து  வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டு வந்தது. நேற்று ரூ.100ஐ நெருங்கியது. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ரூ.45க்கு தரமான வெங்காயம் இன்று முதல்  விற்பனை செய்யப்படும் இன்று நாளை முதல் தமிழகத்தில் உள்ள இதர பகுதிகளில் வெங்காயம் கூட்டுறவு துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக விற்பனை  செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அறிவித்தார்.

அதன்படி, இன்று சென்னை தேனாம்பேட்டை கூட்டுறவு சிறப்பங்காடியில், வெங்காய விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,  பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் மழைக்காலம் காரணமாக வெங்காய வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டிற்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும் 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் என 10 லட்சம் டன் வெங்காய தேவை உள்ளது. மேலும் விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் மூலம் ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு  அந்த நிதியின் மூலம் விலை உயரும் உணவு பொருட்களின் விலை கட்டுபடுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 டன் வெங்காய கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேசியவேளாண் இணையத்தின் மூலம் வெங்காய  கொள்முதலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்லிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. வெங்காய பதுக்கலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிவித்தார்.


Tags : season ,Cellur Raju ,price shops , Decrease in onion supply due to monsoon: Action to sell onions in fair price shops ... Interview with Minister Cellur Raju
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...