×

வத்தல்மலையில் குறுகலான சாலை அமைத்ததால் பஸ் போக்குவரத்து இல்லாமல் மலை வாழ் மக்கள் தவிப்பு

தர்மபுரி: தர்மபுரி நகரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் வத்தல்மலை உள்ளது. இந்த வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 13 மலைக் கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் வத்தல்மலை உள்ளது. பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குறைந்த வெப்ப நிலை நிலவி வருவதால் சில்வர் ஓக் மரங்கள், காபி பயிர் சாகுபடி பரவலாக காணப்படுகின்றன. மேலும் சோளம், கேழ்வரகு, சாமை போன்ற பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் வழியாக, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வத்தல்மலைப் பகு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 2011ம் ஆண்டு வரையும் சாலை வசதி கிடையாது. வத்தல்மலை கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, அடிவாரத்தில் இருந்து பஸ் மூலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

சாலை வசதி செய்து தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மலைவாழ் மக்கள் ஒன்றுசேர்ந்து மண் சாலை அமைத்தனர். அதன்பின் கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரையும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைத்த பிறகு, தங்களுக்கு பஸ்வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மலைவாழ்மக்கள் இருந்து வந்தனர்.

ஆனால் இதில் ஏமாற்றமே மிஞ்சியது. கொண்டை ஊசி வளைவில் பஸ், மினி பஸ் திரும்ப முடியாத வகையில் இந்த சாலை குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார், ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த மலைக் கிராம மக்கள் கார், ஜீப்பில் செல்ல அதிக கட்டணம் செலுத்தியே இதுவரை தர்மபுரி போன்ற பகுதிக்கு வந்து செல்கின்றனர். சாலை வசதி இருந்தும், பஸ் வசதி இல்லாததால், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி நிலையில் உள்ளனர். மலைப்பாதையில் சென்று திரும்பும் வகையில், சாலையை அகலப்படுத்தி மினி பஸ்களை மட்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில்பருவமழைபெய்து வருவதால், வத்தல்மலை பாதையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், வத்தல்மலை பகுதி மக்கள் நடந்து சென்று வந்தனர்.இந்நிலையில் தற்போது சாலை அமைத்த பிறகும், பழைய நடைமுறைகளில் தான் நடந்து செல்கிறார்கள். குறுகலான சாலை அமைக்கப்பட்டதால் தான், பஸ் வசதி இல்லாமல் உள்ளது. வத்தல்மலை மேல்பரப்பில் இருந்து தர்மபுரிக்கு ஒரு ஜீப்பில் சென்று வர ரூ.140வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே விரைவில் மினிபஸ் போக்குவரத்தை தொடங்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Wattalmalai , Dharmapuri, Bus Transport
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...