×

கோவை-ராமேஸ்வரத்திற்கு தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: தொழிலாளர்கள் வேண்டுகோள்

மானாமதுரை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலைக்கு சென்றுள்ள தொழிலாளர் குடும்பங்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊரான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சு நூற்பாலை, பனியன், மோட்டார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதுதவிர திருச்செங்கோடு, அந்தியூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலும் வேலை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்கள் பலர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். இந்த தொழிலாளர்கள் தீபாவளி விடுமுறைக்கு ஊர் திரும்புவார்கள். அதேபோல மாணவர்கள், தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பார்க்கவும், பண்டிகையை கொண்டாடவும் சொந்த ஊர்களுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை.

பண்டிகையை கொண்டாட கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் உள்ள பஸ் ஸ்டாண்டுகளிலும், டெப்போக்களின் முன்பும் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலம் ஆண்டுதோறும் நீடித்து வருகிறது. பஸ் வசதியும் போதுமான அளவில் கிடைக்காததால் பல குடும்பங்கள் தீபாவளியன்று மதியத்திற்கு மேல்தான் ஊர்போய் சேருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் கூறுகையில், மதுரையிலிருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, வழியாக போத்தனூர் வரை ரயில்வே அகலப்பாதை பணிகள் முடிந்து கோவைக்கு ரயில் போக்குவரத்து துவங்கி பல ஆண்டுகளாகிறது. பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை அகலப்பாதை பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலை, படிப்பிற்காக சென்றவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ரயில் வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

இதனால் தென்மாவட்ட மக்களுக்கு பண்டிகைகால ரயில் பயணம் கனவாகவே இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் போல், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயிலை இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயடைவர். தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

இதுவரை இல்லை

தீபாவளிக்கு ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு மட்டுமே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதில்லை.

Tags : Coimbatore-Rameshwaram ,Diwali: Workers , Deepavali, special trains
× RELATED கோவை-ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு